கொடைக்கானலில் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் நகரை ஒட்டியுள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி, வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதேபோல் கொடைக்கானல் அருகே போளூர் மலைக்கிராமத்தில் பசுமை சூழ்ந்த மலை முகடுகளுக்கு இடையே புலவிச்சாறு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கடந்த சில மாதங்களாக நீர்வரத்து இல்லாமல் புலவிச்சாறு அருவி வறண்டு காணப்பட்டது. தற்போது பெய்த பலத்த மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்தநிலையில் வெள்ளியை உருக்கிவிட்டது போன்று தண்ணீர் கொட்டும் அருவியின் எழில்மிகு காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், தங்களது செல்போன், கேமராக்களில் வீடியோ, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.