மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது


மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
x

மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

சேலம்

மேட்டூர் அணை

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு அதிகபட்சமாக அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதுடன், காவிரி கரையோர மக்களும் உஷார்படுத்தப்பட்டனர்.

காவிரி ஆற்றையொட்டி உள்ள மேட்டூர்- எடப்பாடி சாலையில் நேற்று முன்தினம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போலீசார் போக்குவரத்தை தடை செய்தனர்.

தண்ணீர் வரத்து குறைந்தது

இந்த நிலையில் நேற்று காலையில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

காவிரி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றம் குறைந்ததால் மேட்டூர்- எடப்பாடி சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதுவும் இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்ல போலீசார் அனுமதித்தனர். கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கவில்லை.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்தை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.


Next Story