கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தேவை


கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் தேவை
x
தினத்தந்தி 4 Aug 2023 1:30 AM IST (Updated: 4 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

தேனி

விவசாயிகள் மனு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பெரியகுளம் அருகே எ.வாடிப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சிலர் நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்துவிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

மனு கொடுத்த விவசாயிகள் கூறியதாவது:-

குள்ளப்புரம் கிராமத்தில் உள்ள சிறுகுளம் கண்மாய் மூலம் எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 90 நாட்களுக்கு முன்பு கண்மாய் நிரம்பியதால் 50 ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். அவ்வாறு சாகுபடி செய்த நெற்பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில், கண்மாயில் தண்ணீர் இருப்பு குறைந்து விட்டது.

கருகும் பயிர்கள்

கண்மாயில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் திறக்க முடியாத அளவுக்கு தண்ணீர் வறண்டு விட்டது. தற்போது கண்மாயில் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. அதை மோட்டார் வைத்து எடுத்து பாசனத்துக்கு பயன்படுத்தினால் நெற்பயிர்களை காப்பாற்றிவிட முடியும். அதற்காக விவசாயிகள் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்க முயற்சி செய்த போது, கண்மாயில் மீன் வளர்க்கும் நபர் ஒருவர் அனுமதிக்கவில்லை.

இன்னும் 3 முறை தண்ணீர் பாய்ச்சினால் நெற்பயிர்கள் விளைச்சல் அடைந்து அறுவடை செய்து விட முடியும். எனவே கருகும் பயிர்களை காப்பாற்ற குளத்தில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பயன்படுத்த விவசாயிகளுக்கு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story