20 நாட்களில் தினசரி குடிநீர் வினியோகம்
காங்கயம்
காங்கயத்தில் இன்னும் 20 நாட்களில் காங்கயம் நகரின் அனைத்து பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு
காங்கயம் நகராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலமும், நகராட்சிக்குச் சொந்தமான தாராபுரம் அருகே உள்ள தாளக்கரை தலைமை நீரேற்று நிலையம் மூலமும் குடிநீர் வினியோகம் வாரம் ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா காங்கயம் நகரில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நகராட்சியில் குடிநீர் வினியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். காங்கயம் நகராட்சிப் பகுதிக்கு தினசரி வினியோகம் செய்வதற்காக 30 லட்சம் குடிநீர் கிடைத்து வரும் நிலையில், இந்த நீரைக் கொண்டு நகர்ப்பகுதிக்கு தினசரி குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், வால்வு மற்றும் பகிர்மான குழாய் இணைப்புகளை கொடுத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தினசரி குடிநீர் வினியோகம்
இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறுகையில் "நகராட்சி நிர்வாக இயக்குனரின் அறிவுறுத்தலின்படி, காங்கயம் நகரில் தினசரி குடிநீர் வினியோகம் செய்வதற்காக குடிநீர் குழாய்களை சரி செய்து வருகிறோம். தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 20 நாட்களுக்குள் நகரின் அனைத்துப்பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படும்" என்றார்.
ஆய்வின் போது, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் கி.ராஜன், நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் பாலச்சந்திரன், காங்கயம் நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன், நகராட்சிப் பொறியாளர் ம.திலீபன் ஆகியோர் உடனிருந்தனர்.