வள்ளியாற்றில் 2 இடங்களில் நீர்க்கசிவு


வள்ளியாற்றில் 2 இடங்களில் நீர்க்கசிவு
x

மணவாளக்குறிச்சி அருகே வள்ளியாற்றில் 2 இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக சப்-கலெக்டர் கவுசிக் நேரில் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே வள்ளியாற்றில் 2 இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக சப்-கலெக்டர் கவுசிக் நேரில் ஆய்வு செய்தார்.

2 இடங்களில் நீர்க்கசிவு

மணவாளக்குறிச்சி அருகே கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையின் போது வள்ளியாற்றில் 6 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. பின்னர் மணல் மூடை வைத்து தற்காலிகமாக அடைக்கப்பட்டது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பெய்த கன மழையில் வள்ளியாற்றில் மணல் மூடை அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் 2 இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டது.

இந்த தண்ணீர் பூவாடி பகுதியில் உள்ள நெற்கதிர்களுக்குள் புகுந்து தேங்கியது. இந்த நிலை தொடர்ந்தால் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.

சப்-கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அதனை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க தாசில்தார் கண்ணனுக்கு உத்தரவிட்டார்.

மேலும் பூவாடி கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்கவும், வள்ளியாற்றில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றவும் கூறினார்.

அப்போது பூவாடி விவசாயிகள், தலக்குளம் வள்ளியாறு முகத்துவாரத்தில் இருந்து பூவாடி கிராமம் செல்லும் சகதியான சாலையை செப்பனிட வேண்டும் என முறையிட்டனர். அதற்கு பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது குளச்சல் கிராம வருவாய் ஆய்வாளர் முத்துபாண்டி, மணவாளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், ஏலா சங்க தலைவர் ராஜ்குமார் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

டிராக்டரில் சென்றார்

முன்னதாக சப்-கலெக்டர் கவுசிக் பூவாடி கிராமத்திற்கு செல்ல சுமார் 1½ கி.மீட்டர் தூரம் டிராக்டரில் சென்றார். அதாவது பூவாடி கிராமம் பெரியகுளம் ஏலாவின் கிழக்கு பகுதியில் உள்ளது. பெரியகுளத்தை சீரமைக்கும் பணிக்கு எடுக்கப்பட்ட மண் கரையில் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. மழையில் இந்த மண் கரைந்து சகதியாக அந்த பகுதி காட்சி அளித்தது.

எனவே இந்த பகுதிக்கு செல்ல டிரைவர் மூலம் சப்-கலெக்டர் கவுசிக் டிராக்டரில் சென்றார்.


Next Story