பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்பட 4 அணைகளில் நீர்மட்டம் உயர்வு


பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்பட  4 அணைகளில் நீர்மட்டம் உயர்வு
x

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்பட 4 அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்பட 4 அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்மட்டம் உயர்ந்தது

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவ மழையின் போது பேச்சிப்பாறை உள்பட அனைத்து அணைகளுக்கும் நிரம்பின. பின்னர் தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்ட போதிலும் அவ்வப்போது மழை பெய்து வந்ததால் அணைகளின் நீர்மட்டம் பெருமளவில் குறையவில்லை. இந்தநிலையில் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பெய்த தொடர் கன மழையினால் வெள்ள அபாய அளவைக் கடந்த நிலையில் காணப்பட்டு பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44 அடியைக் கடந்து உயர்ந்தது. இதையடுத்து அணையிலிருந்து தொடர்ந்து 7 நாட்கள் உபரி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் 42 அடியாக குறைந்த பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது பெய்த சாரல் மழையால் மீண்டும் 43 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு வெள்ள அபாய அளவு 42 அடியா கும். இதே போன்று 77 அடி நீர்மட்ட கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவான 72 அடியைக் கடந்து 72.52 அடியாக உயர்ந்துள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதே போன்று தலா 18 அடி நீர்மட்ட கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவான 12 அடியை கடந்து 12.04 மற்றும் 12.13 அடியாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே மாவட்டத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவ மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இப்போதே அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்த நிலையில் உள்ளதால் மாவட்டத்தில் வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையிலான கண்காணிப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.


Next Story