மழை பெய்தும் நிரம்பாத நீர் நிலைகள்; விவசாயிகள் கவலை
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் மழை பெய்தும் நிரம்பாததால் விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.
நீர் வழிப்பாதை
வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளான ஏரி மற்றும் குளங்கள் இந்த ஆண்டு அடைமழை மாதமான ஐப்பசி மாதத்தில் கூட போதுமான மழை இன்றி நீர் குைறந்து காணப்படுகிறது. கார்த்திகை மாதமான இம்மாதத்தில் தற்சமயம் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஒரு சில இடங்களில் அவ்வப்போது, மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. ஆனாலும் குளம், ஏரிகளுக்கு செல்ல உரிய நீர் வழிப்பாதைகள் இன்றி தண்ணீர் வீடுகளுக்கு அருகாமையிலும், விவசாய தோட்டங்களிலும் சூழ்ந்து நின்று விடுகின்றன.
இதனால் உரிய நீர் வழிப்பாதை முறையாக இல்லாததால் ஏரி, குளம், குட்டை பகுதிகளில் பெய்யும் மழை நீரை மட்டுமே சேமித்து வைக்கக்கூடிய வகையிலே இருந்து வருகின்றன. இப்பகுதிகளில் சுமார் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தவொரு பகுதியில் மழை பெய்தாலும் வரத்து வாரிகள் வழியாக, நேராக ஏரி, குளங்களுக்கு மழை நீர் சென்றன. இதனால் ஏரி, குளங்கள் நிறைந்து முற்போகமும் விவசாயம் செழித்து வளர்ந்து வந்தன.
ஆக்கிரமிப்பு
அதன் பின்னர் அதிகரித்து வந்த ஆக்கிரமிப்புகளால் பல்வேறு வரத்து வாரிகள் இருந்த இடம் தெரியாமல் போயின. மேலும் பல்வேறு இடங்களில் இருந்த குளங்கள் கூட குட்டைகளாக மாறி வருகிறது. மேலும் பல குளங்கள் மறைந்தே போயின. அதன் பலனாக தற்சமயம் கிணறுகள் இருந்த இடங்களில் எல்லாம் ஆழ்குழாய் கிணறுகள் இருக்கின்றன.
நிலத்தடி நீர்மட்டம்
மேலும் நிலத்தடி நீர் மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்று விட்டன. இதனால் பெரும்பாலான விவசாய விளை நிலங்களில் தைல மற்றும் சீமைக்கருவேல மரங்களே நிறைந்து காணப்படுகின்றன. மேலும் காட்டாற்று மழை நீர் வரும் வழிப்பாதைகள் கூட முட்புதர்கள் மண்டிய நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
கோரிக்கை
இப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள அனைத்து நீர் நிலை பகுதி நீர் வழிப்பாதை மற்றும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்ற சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் முன் வர வேண்டும் எனவும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.