பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு


பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் காந்தி நேற்று திறந்து வைத்து கால்வாயில் மலர் தூவினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் காந்தி நேற்று திறந்து வைத்து கால்வாயில் மலர் தூவினார்.

தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீரை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி திறந்து வைத்து மலர்தூவினார். மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி அணையின் வலது மற்றும் இடதுபுறக்கால்வாய் வழியாக டிசம்பர் 28-ந் தேதி முதல் வருகிற ஏப்ரல் 26-ந் தேதி வரையில் 120 நாட்களுக்கு 2-ம் போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி, அணையில் இருந்து வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 87 கனஅடியும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 93 கனஅடியும் என மொத்தம் 180 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

9,012 ஏக்கர் பாசன வசதி பெறும்

இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பரஅள்ளி, பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் 9,012 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். அறிவிக்கப்பட்ட தேதிக்கு பிறகு எக்காரணத்தை கொண்டும் கால நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது.

விவசாயிகள் உரிய காலத்தில் நடவு செய்து நல்ல மகசூலை பெறவேண்டும். விவசாயிகளுக்கு தேவையான ஜிங்க் சல்பட், உரங்கள் உள்ளிட்டவை தேவை, இருப்பு உள்ளிட்ட விவரங்களை அதற்கான இணையதளம், செல்போன் செயலிகள் வழியாக தெரிந்து கொள்ளலாம். தனியாரைவிட நெல்லுக்கு கூடுதல் விலை கொடுத்து அரசு கொள்முதல் செய்கிறது. விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறது. பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகள் தாமதமாக தொடங்கினாலும், தரமாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) குமார், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஸ்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், நகர செயலாளர் நவாப், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மணிமேகலை நாகராஜ், பேரூராட்சி தலைவர்கள் தம்பிதுரை, அம்சவேணி செந்தில்குமார், நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, உதவி பொறியாளர் காளி பிரியன், கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story