முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்காக, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார்.
முல்லைப்பெரியாறு அணை
தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரையிலான 14 ஆயிரத்து 707 ஏக்கர் பாசனப்பகுதி கம்பம் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படுகிறது. இருபோக பாசனம் நடைபெறும் இந்த பகுதிக்கு முல்லைப்பெரியாறு அணை நீர் ஆதாரமாக திகழ்கிறது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி இந்த அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம் ஆகும். இந்த ஆண்டு அதிகளவில் கோடைமழை பெய்ததால் தற்போது அணையின் நீர்மட்டம் 132 அடி வரை எட்டியுள்ளது.
இதன் காரணமாக முதல் போக பாசனத்துக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பாசனத்திற்கு திறப்பு
இதனையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பொத்தானை அழுத்தி அணை மதகை திறந்து வைத்தார். தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலை வகித்தார்.
கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு வினாடிக்கு 200 கனஅடியும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 100 கனஅடியும் ஆக மொத்தம் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து சீறிப்பாய்ந்த தண்ணீரில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மலர்தூவி வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்செல்வன், மதுரை நீர்வளத்துறை பெரியாறு-வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், பெரியாறு வைகை வடிநில கோட்ட பொறியாளர் அன்புச்செல்வம், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, தாசில்தார் அர்ச்சுணன், கூடலூர் தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
14 ஆயிரத்து 707 ஏக்கர்
முன்னதாக மதகு பகுதியில் தண்ணீர் திறந்து விடும் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. முதல்போக பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் உத்தமபாளையம் தாலுகாவில் 11 ஆயிரத்து 807 ஏக்கர் நிலம், தேனி தாலுகாவில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் நிலம், போடி தாலுகாவில் 488 ஏக்கர் நிலம் வீதம் மொத்தம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுகிய கால நெற்பயிர்களை சாகுபடி செய்து பயன் அடைய வேண்டும். மழை பெய்யாமல் தண்ணீர் இருப்பு குறைந்துவிட்டால் முறை வைத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். எனவே விவசாயிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மின்உற்பத்தி தொடக்கம்
152 அடி உயர முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 132.35 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 239 கனஅடியாக காணப்பட்டது.
பாசனத்திற்காக வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் வினாடிக்கு 27 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.