மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு
மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணை நிரம்பியது
கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு ஆர்ப்பரித்து வந்ததையடுத்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வந்த உபரிநீர் முழுவதுமாக திறந்து விடப்பட்டது.
இதனால் காவிரியில் 2 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீர் வரை வெளியேற்றப்பட்டது. இடையில் பவானிசாகர், அமராவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் கரூர் மாவட்டம் அருகேயுள்ள திருமுக்கூடலூரில் சேர்ந்து மாயனூர் கதவணை வந்து அங்கிருந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு அதிகபட்சமாக 2 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
கொள்ளிடத்தில் வெள்ளம்
இந்த வெள்ளநீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பிரித்து வெளியேற்றப்பட்டது. உபரிநீர் வடிகாலாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் 1½ லட்சம் கனஅடி வரை வெள்ளநீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
லால்குடி, உத்தமர்சீலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழைப்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதற்கிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால், கடந்த 18-ந்தேதி முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
இதைத்தொடர்ந்து அன்று காலை முதல் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, கர்நாடகாவில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்படும் தண்ணீரால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே முழுவதுமாக திறக்கப்படுகிறது. இதனால் மீண்டும் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் இடைவெளிக்கு பிறகு காவிரி ஆற்றில் தற்போது மீண்டும் வெள்ளம் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளது.
63 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி திருச்சி முக்கொம்பு மேலணைக்கு 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து கொள்ளிடத்தில் 63 ஆயிரம் கன அடி நீரும், காவிரியில் 22 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.