குழாய் உடைப்பால் வீணாக வெளியேறும் குடிநீர்
கொள்ளிடத்தில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்,
கொள்ளிடத்தில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டுக்குடிநீர்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான நீரேற்று நிலையம் உள்ளது. இங்குள்ள அதிக சக்தி வாய்ந்த மின்மோட்டார் மூலம் கொள்ளிடம் ஆற்று நீர் எடுக்கப்பட்டு ராட்சச குழாய் மூலம் கொள்ளிடம் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.வடரங்கம் கிராமத்திலிருந்து சென்னியநல்லூர், பெரம்பூர், குன்னம், புத்தூர், தைக்கால், கொள்ளிடம் வழியாக மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம், நல்லூர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் செல்லும் தண்ணீர் ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள குடிநீர் தேக்க தொட்டிக்கு மின் மோட்டார் மூலம் ஏற்றி தேக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து தண்ணீர் மீண்டும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த குடியிருப்புகளுக்கு தெரு குழாய்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
உடைப்பு
பல கிராமங்களுக்கு பூமிக்கு அடியில் செல்லும் பிரதான கூட்டு குடிநீர் குழாய் கொள்ளிடம் கடைவீதியில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் எந்த பயனும் இன்றி வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் அதிகமான தண்ணீர் சாலை ஓரம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.இதனால் சிறு பாசன வாய்க்கால் போன்று தண்ணீர் சாலையோரம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும் வாகனத்தில் செல்பவர்களும், சாலை ஓரத்தில் உள்ள கடை வியாபாரிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
குடிநீர் பற்றாக்குறை
மேலும் பல கிராமங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு சென்று சேர வேண்டிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கொள்ளிடம் கடைவீதியிலேயே வீணாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் தற்போது உள்ள சூழ்நிலையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீரை பெற்று பயன்படுத்துபவர்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.