திற்பரப்பு அருவியில் கொட்டும் தண்ணீர்
குமரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது நேற்று மாலையில் நிறுத்தப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது நேற்று மாலையில் நிறுத்தப்பட்டது.
ஜில்லென்ற சீதோஷ்ண நிலை
குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழையும், மிதமான மழையுமாக மாறி, மாறி பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து மாவட்டம் முழுவதும் சாரல் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது. பின்னர் இரவில் இருந்து தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய நீடித்தது.
தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் நேற்று பகல் முழுவதும் வானம் இருண்டபடி காட்சி அளித்தது. சூரிய ஒளியையே காண முடியவில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் ஊட்டி, கொடைக்கானல் போன்று ஜில்லென்ற சீதோஷ்ண நிலை நிலவியது.
தொழில்கள் பாதிப்பு
பள்ளிகளுக்கு ஏற்கனவே காலாண்டு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் பள்ளி மாணவ- மாணவிகளின் நடமாட்டம் இல்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மழையில் நனைந்தவாறும், குடைகளை பிடித்தவாறு சென்றனர்.
தொடர் மழையால் சாலைகள், தெருக்களில் மக்களின் நடமாட்டம் குறைவாக இருந்தது. கட்டுமானப் பணிகள், உப்பள தொழில், செங்கல்சூளைத் தொழில், ரப்பர் பால்வெட்டும் தொழில், மீன்பிடி தொழில் போன்றவை பாதிக்கப்பட்டன. இந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் வீடுகளுக்கு முடங்கினர். தொடர் மழையால் ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திற்பரப்பு அருவி
மலையோர பகுதியில் பெய்த தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குறிப்பாக அருவியின் இடதுபுறம் இரண்டு பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் கொட்டுகிறது. இதனால் நேற்று திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க செல்லாமல் இருக்கும் வகையில் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தினர். ஏனைய பகுதிகளில் குளிக்க அனுதிக்கப்பட்டனர். அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தால் குளிக்க தடை விதிக்க வாய்ப்புள்ளது. நேற்று திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளு, குளு சீசனை அனுபவித்தனர்.
பெருஞ்சாணி அணை மூடல்
தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு நேற்று மாலையில் வினாடிக்கு 1000 கன அடி வரை தண்ணீர் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே மழையால் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் தேவை குறைந்ததால் பெருஞ்சாணி அணை நேற்று மாலையில் மூடப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 300 கன அடியாக குறைக்கப்பட்டது.
மழை அளவு
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 16.8, பெருஞ்சாணி அணை- 11.2, புத்தன் அணை- 9, சிற்றார்- 1 அணை-30, சிற்றார்-2 அணை- 10.4, மாம்பழத்துறையாறு அணை- 24, முக்கடல் அணை- 9.2, பூதப்பாண்டி-13.4, களியல்-12, கன்னிமார்-9.4, கொட்டாரம்- 11.6, குழித்துறை-15.6, மயிலாடி-16.2, நாகர்கோவில்- 8.2, புத்தன் அணை-9, சுருளோடு-17.2, தக்கலை-19, குளச்சல்-16, இரணியல்-12.4, பாலமோர்-23.4, மாம்பழத்துறையாறு-24, திற்பரப்பு- 21.5, கோழிப்போர்விளை-15.2, அடையாமடை-10.2, குருந்தங்கோடு-20, முள்ளங்கினாவிளை-12.8, ஆணைக்கிடங்கு-21.4 என்ற அளவில் மழை பெய்துள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் மழையால் குமரி மாவட்டத்தில் 2-வது போகமான கும்பப்பூ நெல் சாகுபடியில் இறங்கியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.