திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
தளி,
உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து 2-ம் மண்டல பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறப்பு விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகிேயார் பங்கேற்றனர்.
திருமூர்த்தி அணை
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதற்காக பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் 2-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதற்குண்டான கருத்துருவை அதிகாரிகள் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
தண்ணீர் திறப்பு
இந்த சூழலில் திருமூர்த்தி அணையில் இருந்து 2- ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து நேற்று மதியம் மணியளவில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பொத்தானை அழுத்தி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தனர்.அதைத்தொடர்ந்து மதகுகள் வழியாக பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதையடுத்து அணைப்பகுதியில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.
அணைக்கு நீர்வரத்து மற்றும் நீர் இருப்பினை பொருத்து தேவைக்கேற்ப உரிய இடைவெளிவிட்டு ஒரு சுற்றுக்கு 21 நாட்கள் வீதம் 4 சுற்றுகளாக 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர் தாலுகா திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம் மற்றும் காங்கேயம் தாலுகாவிலுள்ள உள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கலந்து கொண்டவர்கள்
மேலும் பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தளிவாய்க்காலில் நேற்று முதல் அடுத்த ஆண்டு மே மாதம் 31-ம் தேதி வரை 700 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தினைகுளம், செட்டிகுளம், கரிசல்குளம், அம்மாபட்டிகுளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் வலையபாளையம்குளம் மற்றும் நேரடி பாசனத்தின் மூலமாக 2 ஆயிரத்து 786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதற்கான நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், உடுமலை ஒன்றியகுழு தலைவர் மகாலட்சுமி முருகன், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தின், ஒன்றிய செயலாளர்கள் செழியன், செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ரவி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், பொதுப்பணிதுறையினர் விவசாயிகள் கலந்து கொண்டனர்.