3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தளி,
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து 3-ம் மண்டல பாசனத்திற்கு நேற்று செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திருமூர்த்தி அணை
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதற்காக பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் தரப்படும் தண்ணீரும் மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் உருவாகும் காட்டாறுகள், பாலாறு மற்றும் திருமூர்த்திமலை ஆறு ஆகியவற்றின் மூலம் பெறப்படுகின்ற தண்ணீரும் திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களாகும்.
அதை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குமரலிங்கம், பூலாங்கிணர் மற்றும் குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. அதைத்தொடர்ந்து 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்துபாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதற்குண்டான கருத்துருவை அதிகாரிகள் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
தண்ணீர் திறப்பு
இந்த சூழலில் திருமூர்த்தி அணையில் இருந்து 3- ம் மண்டல பாசனத்திற்குதண்ணீர் திறந்து விடுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து நேற்று மாலை 5.45 மணியளவில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தனர். அதைத்தொடர்ந்து மதகுகள் வழியாக பி.ஏ.பி. கால்வாயில்தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.இதையடுத்து அணைப்பகுதியில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.
அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்து மற்றும் நீர் இருப்பினை பொருத்து தேவைக்கேற்ப உரிய இடைவெளிவிட்டு ஒரு சுற்றுக்கு 21 நாட்கள் வீதம் 4 சுற்றுகளாக 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர் தாலுகா திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம் மற்றும் காங்கயம் தாலுகாவில் உள்ள 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கலந்து கொண்டவர்கள்
இதற்கான நிகழ்ச்சியில் தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவர் .ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, ஆர்.டி.ஓ ஜஷ்வந்த் கண்ணன், உடுமலை நகரச் செயலாளர் வேலுச்சாமி, உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய செயலாளர்கள் செழியன், செந்தில்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.