2-ம் மண்டல பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறப்பு


2-ம் மண்டல பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறப்பு
x

2-ம் மண்டல பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறப்பு

திருப்பூர்

தளி

திருமூர்த்தி அணையில் இருந்து 2-ம் மண்டல பாசனதிற்கு விரைவில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

திருமூர்த்தி அணை

மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு மழைக்காலங்களில் வனத்தில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகளும், காண்டூர் கால்வாய் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

பாசன வசதிக்கு ஏதுவாக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.அத்துடன் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, மடத்துக்குளம், பூலாங்கிணர், குடிமங்கலம் கணக்கம்பாளையம் உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பராமரிப்பு பணி

காண்டூர் கால்வாயில் பராமரிப்பணி மேற்கொள்ளப்பட்டதால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரவில்லை. அதன்பின்னர் பணிகள் முடிந்த நிலையில் கடந்த வாரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணை நாள் ஒன்றுக்கு 2 அடி வீதம் படிப்படியாக உயர்ந்து 42 அடியை கடந்து உள்ளது. இதற்கிடையில் விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் பேரில் 2-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு அதிகாரிகள் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

அரசிடமிருந்து உத்தரவு வரப்பட்ட பின்பு தண்ணீர் திறப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வருவதாலும் இந்த மாத இறுதிக்குள் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் நிலத்தை உழுது பயன்படுத்தி சாகுபடி பணிகளுக்கும் தயாராகி வருகின்றனர். 60 அடி உயரம் கொண்ட அணையில் நேற்று காலை நிலவரப்படி 42.06 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.அணைக்கு வினாடிக்கு 893 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது அணையில் இருந்து வினாடிக்கு 26 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

----


Next Story