'தினத்தந்தி' செய்தி எதிரொலி!ஜெர்தலாவ் கிளை கால்வாயில் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு-பாப்பாரப்பட்டி, இண்டூர் விவசாயிகள் மகிழ்ச்சி


தினத்தந்தி செய்தி எதிரொலி!ஜெர்தலாவ் கிளை கால்வாயில் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு-பாப்பாரப்பட்டி, இண்டூர் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

'தினத்தந்தி செய்தி' எதிரொலியாக ஜெர்தலாவ் கிளை கால்வாய் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பாப்பாரப்பட்டி, இண்டூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினத்தந்தி செய்தி

சின்னாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள பஞ்சப்பள்ளி அணையில் இருந்து ஜெர்தலாவ் கிளை கால்வாய் வழியாக பாப்பாரப்பட்டி, இண்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள 17 ஏரிகளுக்கு உபரிநீரை திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த மாதம் 29-ந் தேதி 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது.

இதையடுத்து கடகத்தூர், சோகத்தூர், ராமக்காள் ஏரிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று கூறி வந்த பழைய ஆயக்கட்டு விவசாயிகள் மற்றும் புதிய கிளை ஆயக்கட்டு விவசாயிகள் ஆகியோரிடம் தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

தண்ணீர் திறப்பு

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அணையின் பிரதான கால்வாயில் இருந்து ஜெர்தலாவ் கிளை கால்வாய் தொடங்கும் இடமான எர்ரணஅள்ளிக்கு உதவி கலெக்டர் நேற்று முன்தினம் நேரில் சென்றார். பின்னர் அவர் ஜெர்தலாவ் கிளை கால்வாயில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை திறந்து விட்டார். பழைய ஆயக்கட்டுதாரர்களுக்கும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

ஜெர்தலாவ் கிளை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தொட்லாம்பட்டி ஏரி நிரம்பியது. இதையடுத்து இந்த ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் மூலம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைக்குளம் ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பனைக்குளம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

மேலும் ஜெர்தலாவ் கிளை கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் வரும் பட்சத்தில், சின்ன ஏரி, அம்மன் ஏரி, கஞ்சன் ஏரி உள்பட பாப்பாரப்பட்டி, இண்டூர் பகுதிகளில் உள்ள 17 ஏரிகளும் நிரம்பும் நிலை உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

ஜெர்தலாவ் கிளை கால்வாய் வெட்டப்பட்டு கடந்த 10 ஆண்டுகள் ஆன நிலையில் முதல் முறையாக அதில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பாப்பாரப்பட்டி, இண்டூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story