தொப்பையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு-5,330 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்


தொப்பையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு-5,330 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தொப்பையாறு அணையில் இருந்து பாசனத்துக்கு கலெக்டர் சாந்தி தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் 5,330 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.

தொப்பையாறு அணை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவில் உள்ள தொப்பையாறு அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி, தொப்பையாறு அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

தொப்பையாறு அணை ஆயக்கட்டுதாரர்களின் வேண்டுகோளை ஏற்று விவசாய பாசனத்திற்காக தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஆயக்கட்டு பகுதியில் 2 ஆயிரத்து 50 ஏக்கர் நிலமும், சேலம் மாவட்டத்திலுள்ள ஆயக்கட்டு பகுதியில் 3 ஆயிரத்து 280 ஏக்கர் நிலமும் என மொத்தம் 5 ஆயிரத்து 330 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து 70 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

அதிக மகசூல்

இதன் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர், கம்மம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள செக்காரப்பட்டி, வெள்ளார், தெத்திகிரிப்பட்டி, மல்லிகுந்தம் என மொத்தம் 6 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.

விவசாயத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், விவசாயிகள் நீர்வளத்துறையினருடன் ஒத்துழைத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறும் நோக்குடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நிர்வாக அமைப்பு செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர்கள் மோகனப்பிரியா, மாலதி, தாசில்தார் ஆறுமுகம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story