மூணாறு தலைப்பு அணை திறப்பு


மூணாறு தலைப்பு அணை திறப்பு
x

திருவாரூர், நாகை மாவட்ட குறுவை பாசனத்துக்காக நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை திறக்கப்பட்டு உள்ளது.

திருவாரூர்

நீடாமங்கலம்;

திருவாரூர், நாகை மாவட்ட குறுவை பாசனத்துக்காக நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை திறக்கப்பட்டு உள்ளது.

மூணாறு தலைப்பு அணை

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை உள்ளது. இதை கோரையாறு தலைப்பு என்றும் அழைப்பர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு அந்த நீர் கல்லணையை அடைந்த உடன் கல்லணை திறக்கப்படும்.கல்லணை நீர் பெரிய வெண்ணாற்றில் மூணாறு தலைப்பை வந்தடையும். மூணாறு தலைப்பிலிருந்து பிரியும் வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகிய ஆறுகளின் மூலம் திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

கல்லணை

இந்த ஆண்டு காவிரி டெல்டா குறுவை பாசனத்துக்காக கடந்த மாதம் 24 -ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து முதலில் 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக நிலை உயர்த்தி 10,000 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.கடந்த மாதம் 27-ந் தேதி மாலை 5 மணி முதல் கல்லணையிலிருந்து டெல்டா குறுவை சாகுபடி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நீடாமங்கலம் அருகே உள்ள மூணாறு தலைப்பு அணைக்கு நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தது.

தண்ணீர் திறப்பு

இதைத்தாடர்ந்து பொதுப்பணித்துறையினரால் மூணாறு தலைப்பிலிருந்து திருவாரூர், நாகை மாவட்ட குறுவை சாகுபடி பாசனத்துக்காக முதலில் வெண்ணாற்றில் 208 கனஅடியும், கோரையாற்றில் 1024 கன அடியும், பாமணியாற்றில் 410 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.நேற்று காலை 6 மணியிலிருந்து வெண்ணாற்றில் 917 கனஅடியும், கோரையாற்றில் 1349 கன அடியும், பாமணியாற்றில் 410 கன அடியும் மொத்தம் 2 ஆயிரத்து 676 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 3 ஆறுகளிலும் சீறிப்பாய்ந்தோடும் இந்த தண்ணீர் வெண்ணாற்றின் மூலம் 94 ஆயிரத்து 219 ஏக்கரும், கோரையாற்றின் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 957 ஏக்கரும், பாமணியாற்றின் மூலம் 38 ஆயிரத்து 357 ஏக்கரும் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.


Next Story