பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது


பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு:  பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு;  வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
x

பவானிசாகர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

ஈரோடு

பவானிசாகர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரிநீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதேபோல் மோயாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த தண்ணீரும் பவானிசாகர் அணைக்கு வந்துகொண்டு இருக்கிறது.

இதன்காரணமாக அணை 102 அடியை நேற்று முன்தினம் எட்டியது. இதைத்தொடர்ந்து கீழ் மதகுகள் வழியாகவும், மேல் மதகுகள் வழியாகவும் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வேடிக்கை

சத்தியமங்கலத்தில் கரையோரம் இருந்த சுமார் 15 குடும்பத்தினரை தாசில்தார் ரவிசங்கர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தார்கள். கரையோரம் இருந்த வரசித்தி விநாயகர் கோவில் படிக்கட்டை வெள்ளம் சூழ்ந்தது.

இருகரைகளையும் தொட்டபடி கரை புரண்டு ஓடும் பவானி ஆற்றை பொதுமக்கள் பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்தார்கள். செல்போனில் படம் பிடித்தார்கள்.

வீடுகளுக்குள் வெள்ளம்

கோபி அருகே உள்ள அரசூர் மற்றும் மாக்கினாங்கோம்பை கிராமங்களில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல் மாக்கினாங்கோம்பை ஊராட்சி கணேசபுரம் பகுதியில் 6 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

இதனால் 6 வீடுகளை சேர்ந்தவர்களையும், தாழ்வான இடங்களில் இருந்த மேலும் 10 வீடுகளை சேர்ந்தவர்களையும் அதிகாரிகள் அருகே உள்ள விநாயகர் கோவிலில் தங்கவைத்தார்கள். கடத்தூர் போலீசாரும் பவானி ஆற்றங்கரையோரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். மேவாணி கிராமத்தை சேர்ந்த 33 ஆண்கள், 28 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 65 பேர் அந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

தோட்டங்களில் தண்ணீர்

மாக்கினாங்கோம்பை பகுதிகளில் கரையோரம் உள்ள வாழை தோட்டங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது, நடவு செய்யப்பட்டு சுமார் 1 மாதமே ஆன வாழை கன்றுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அரசூர் மற்றும் மாக்கினாங்கோம்பை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதிகளில் செயல்பட்டுவரும் செங்கல் உற்பத்தி செய்யும் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி

பவானி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் அணைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் கொடிவேரி அணை அருகே உள்ள பாலத்தில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் நின்று அணையை ரசித்தார்கள்.


Next Story