வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறப்பு
வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்்தது. மேலும் இந்த ஆண்டில் 2-வது முறையாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கிளை கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களில் நீரை பெருக்கும் வகையில் 58-ம் கால்வாயில் கடந்த மாதம் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்ததால் 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் தற்போது வைகை அணை மீண்டும் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து, 58-ம் கால்வாயில் இன்று முதல் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. 58-ம் கால்வாயில் தற்போது வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கால்வாய் வழியாக சென்று வருகிறது. வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 58-ம் கால்வாய் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால், அந்த தண்ணீர் உசிலம்பட்டிக்கு வந்து சேர அதிக நாட்கள் ஆகும். எனவே கூடுதலாக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும். அப்போது தான் தண்ணீர் சீக்கிரமாக தங்களது பகுதிக்கு வந்தடைவதுடன், வேகமாக கண்மாய்களில் தண்ணீரை பெருக்க முடியும் என்று உசிலம்பட்டி பகுதி 58-ம் கால்வாய் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.