வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு:பளியன் குடியிருப்பில் உலா வரும் யானைகள்


வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு:பளியன் குடியிருப்பில் உலா வரும் யானைகள்
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பளியன்குடியிருப்பில் காட்டுயானைகள் உலா வருகின்றன.

தேனி

தண்ணீர் தட்டுப்பாடு

கூடலூர் அருகே வண்ணாத்திப்பாறை, மங்களாதேவி பீட், பளியன்குடியிருப்பு, அத்தி ஊத்து, மாவடி, வட்டத்தொட்டி ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இந்த வனப்பகுதிகளில் அரியவகை மரங்கள் மற்றும் யானை, மான், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இங்குள்ள மரங்கள் வெட்டி கடத்தப்படுவதையும், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் வனப்பகுதியையொட்டிய லோயர்கேம்ப் நாயக்கர் தொழு சாலை, குள்ளப்ப கவுண்டன்பட்டி- மின்நிலையம் சாலை ஆகிய இடங்களில் வனத்துறையினர் சோதனைச்சாவடிகள் அமைத்து. கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மழைக்காலங்களில் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுகள் எளிதில் கிடைக்கிறது. தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் வற்றி, புற்கள் காய்ந்து வனவிலங்கு களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

யானைகள்

இதனால் உணவை தேடி வன விலங்குகள் அடிக்கடி மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிக்கு வருகின்றன. குறிப்பாக பளியன்குடியிருப்பு, வெட்டுக்காடு, என்காடு, ஜீவக நதிகுளம் உள்ளிட்ட பகுதி விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் இரவு முழுவதும் அங்கேயே சுற்றித்திரிந்து அதிகாலையில் வனப்பகுதிக்குள் செல்கின்றன.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே சோலார் மின்வேலி கம்பிகள் அமைத்தோ அல்லது அகழிகள் வெட்டியோ வனவிலங்குகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story