மோர்தானா அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும்
ஏரிகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டதால் மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஏரிகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டதால் மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் தாசில்தார் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
விவசாயி ராமலிங்கம்:-
ஏரிகால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்ற மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மரநாய்களால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு இல்லை. மரநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன்:- கடந்த மாதம் குடியாத்தம் பகுதியில் பெய்த பலத்த மழையால் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தட்டப்பாறை, சேம்பள்ளி, பாக்கம், சைனகுண்டா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வேளாண்மை துறையினர் சேதம் மதிப்பீடு குறித்து ஆய்வு செய்யக்கூட வரவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியாத்தம் பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் சேதம் ஏற்படுகிறது. அதனை தடுக்க யானை புகா அகழி அமைக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது போல் யானை தடுப்புபடை ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
கோடைகாலம் தொடங்கி விட்டதால் பல ஏரிகளில் தண்ணீர் மட்டம் குறைந்துவிட்டது. எனவே, மோர்தானா அணையில் இருந்து ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
குடியாத்தம் பகுதியில் தகுதியான நபர்கள் முதியோர் உதவி தொகை கேட்டு விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை.
இடைத்தரகர்கள்
விவசாயி பழனிவேலன்:-
கூட நகரம் ஏரி வரத்துக்கான கால்வாயை ஆக்கிரமித்து தனி நபர் வழி ஏற்படுத்தி உள்ளார். உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி துரைசெல்வம்:-
தாலுகா அலுவலகத்தில் இடைத்தரகர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக முதியோர் உதவித்தொகை, வட்ட வழங்கல் பிரிவு இடங்களில் அதிக அளவு இடைதரகர்கள் உள்ளனர். அவர்கள் அப்பாவி பொதுமக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுகின்றனர். கிராம பகுதிகளில் சாராயம், கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது.
விவசாயி சேகர்:-
குடியாத்தம் உழவர் சந்தையை சுற்றி ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும். 100 நாள் திட்டத்தில் விவசாயம் சம்பந்தமாக எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்க வேண்டும்.
விவசாயி வெள்ளேரி தாமோதரன்:-
வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் இல்லை. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகிறது. இதனால் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் துணை தாசில்தார் ரமேஷ், வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர், மின்வாரிய உதவி பொறியாளர் மாலினிஜோதிராம், நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராஜேஷ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.