வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. மதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழா, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக கடந்த 30-ந்தேதி முதல் வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 500 கன அடி முதல் 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்தநிலையில் மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி ஏற்கனவே அறிவித்தபடி வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அடியோடு நிறுத்தப்பட்டது. கடந்த 6 நாட்களில் வைகை அணையில் இருந்து மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கடந்த 6 நாட்களாக வைகை அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 2 அடி குறைந்துள்ளது. அதன்படி, கடந்த 30-ந்தேதி 54.44 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 52.49 அடியாக குறைந்து காணப்பட்டது. தற்போதைய நிலவரப்படி வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 113 கன அடியாக உள்ளது.