சுவஸ்திக் கார்னர் பகுதியில் புழுதி பறக்காமல் இருக்க தண்ணீர் தெளிப்பு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமா?
சுவஸ்திக் கார்னர் பகுதியில் புழுதி பறக்காமல் இருக்க தண்ணீர் தெளிப்பு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'தினத்தந்தி' செய்தி எதிெராலியால் ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதியில் சாலையில் புழுதி பறப்பதை தடுக்க தண்ணீர் தெளிக்கும் நடவடிக்கையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
'தினத்தந்தி' செய்தி
ஈரோடு மாநகரின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனால் ரோடுகள் குண்டும், குழியுமாகவும், சாலையோரத்தில் பள்ளங்களுடனும் காணப்படுகிறது. மேலும் ரோடுகளில் இருந்து புழுதி பறந்து வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோல் ஈரோடு மாநகரில் சுவஸ்திக் கார்னர் பகுதி உள்பட பல்வேறு இடங்களிலும் சாலைகளில் புழுதி பறந்து வருவது தொடர்பாக நேற்று 'தினத்தந்தி'யில் பிரசுரமாகி இருந்தது.
தண்ணீர் தெளிக்கப்பட்டது
அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நேற்று புழுதி பறக்கும் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் தண்ணீர் தெளிக்கும் பணி நடந்தது. சுவஸ்திக் கார்னர் பகுதியில் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து பணியாளர்கள் சாலையில் ஊற்றினார்கள். இதனால் புழுதி பறந்து பாதிப்பு ஏற்படுத்துவது தற்காலிகமாக தடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இங்கு பணிகள் முடிவது வரை தினசரி இப்படி தண்ணீர் ஊற்றுவது என்பது சாத்தியமாகாது. எனவே விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
கோரிக்கை
இதுகுறித்து சாலையோர வியாபாரி பேபி என்பவர் கூறியதாவது:-
நான் இந்த பகுதியில் சாலையோரத்தில் காய்கறி, கீரைகள் விற்பனை செய்து வருகிறேன். சாலை வேலை தொடங்கியது முதல் என்னால் சரியாக கடை போட முடியவில்லை. சிறிய அளவில் காற்று அடித்தாலே புழுதி பறந்து காய்கள், கீரைகளில் தங்கிவிடும். சாப்பிடும் பொருட்கள் இப்படி இருந்தால் யார் வாங்குவார்கள். இதனால் என்னைப்போல் இங்கு கடை வைத்திருக்கும் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளோம். இப்போது தண்ணீர் தெளித்ததால், புழுதி பறக்கவில்லை. ஆனாலும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல் மாநகராட்சியில் இதுவரை தார் போடப்படாத இடங்களிலும் ரோடுகளை செப்பனிட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.