ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நீடிப்பு: 13-வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடைவிதிப்பு
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல் ,
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணரா ஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 78 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படியும் அதே அளவு நீடித்து வந்தது. இதன் காரணமாக ஐவர்பாணி, ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் இன்று 13-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் இன்று 9-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.