குருசாமிபாளையம் செங்குந்தர் பள்ளியில் ரூ.10 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி-ராஜேஸ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்
குருசாமிபாளையம் செங்குந்தர் பள்ளியில் ரூ.10 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியை ராஜேஸ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் அரசு உதவி பெறும் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி.யிடம் தி.மு.க.வினர் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் ராஜேஸ்குமார் எம்.பி. நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான பூமிபூஜை பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கே.பி.ஜெகநாதன் தலைமை தாங்கினார். பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவரும், பேரூர் தி.மு.க. பொறுப்பாளருமான சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இதில் முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலச்சந்திரன், ஒன்றிய தி.மு.க. முன்னாள் செயலாளர் பழனிவேல், பேரூராட்சி துணைத் தலைவர் காவேரியம்மாள், பள்ளி செயலாளர் அர்த்தனாரி, வக்கீல் கண்ணன், இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தீபன், பேரூராட்சி கவுன்சிலர்கள் காளியண்ணன், கிருஷ்ணமூர்த்தி, தனபால், கீதா தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.