குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
வாய்மேடு கடைத்தெருவில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்மேடு:
வாய்மேடு கடைத்தெருவில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்
வாய்மேடு கடைத்தெருவில் அமைந்துள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. துளசியாப்பட்டினம் நீரேற்று நிலையத்தில் இருந்து அண்ணாபேட்டை, வாய்மேடு வழியாக தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம் கருப்பம் புலம் வழியாக வேதாரண்யம் வரை கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் செல்கிறது.
இந்த பிரதான குழாயில் வாய்மேடு கடைத்தெரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி செல்கிறது. மேலும் இந்த தண்ணீர் சாலையில் செல்லும் பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் செல்வோர் மீதும் படுகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு
இதனால் அவர்கள் தண்ணீரில் நனைந்தபடி செல்கின்றனர். இந்த குழாயில் இதே இடத்தில் பலமுறை உடைப்பு ஏற்பட்டு அதிகாரிகள் சரி செய்திருக்கின்றனர். ஆனால் குறுகிய காலத்திலேயே மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்படுகிறது.
மேலும் கோடைகாலமாக உள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.