தஞ்சையில் அகழி, சாமந்தான், அய்யன் குளங்களுக்கு தண்ணீர் வருமா?
கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு 18 நாட்கள் ஆன நிலையில் தஞ்சையில் உள்ள அகழி, சாமந்தான்குளம், அழகிகுளம், அய்யன்குளங்களுக்கு தண்ணீர் வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு 18 நாட்கள் ஆன நிலையில் தஞ்சையில் உள்ள அகழி, சாமந்தான்குளம், அழகிகுளம், அய்யன்குளங்களுக்கு தண்ணீர் வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் உயர உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கல்லணைக்கால்வாய்
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பிரிந்து செல்கின்றன. இதில் கல்லணைக்கால்வாய் எனப்படும் புது ஆறு தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் 2.29 லட்சம் ஏக்கர் பாசன வசதி அளித்து வருகிறது. இந்த கல்லணைக்கால்வாய் ஆறு மூலம் 694 ஏரி, குளங்களும் பாசன வசதி பெறுகிறது.பிணம் தின்னி ஆறு எனப்படும் இந்த ஆறு 1934-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி திறக்கப்பட்டது.
இந்த ஆற்றில் குறிப்பாக ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தண்ணீர் திறக்கப்படும். மீதமுள்ள 4 மாதங்களில் மட்டும் தண்ணீர் திறக்கப்படாது. கல்லணைக்கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரைக்கொண்டு ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கல்லணைக்கால்வாயில் கடந்த 16--ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 18 நாட்களை கடந்தும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
தண்ணீர் வருமா?
தஞ்சை நகரில் உள்ள அகழி, அய்யன்குளம், சாமந்தான்குளம், அழகி குளத்திற்கும் கல்லணைக்கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு நிரப்புவது வழக்கம். அகழி மற்றும் குளங்களில் நீர் நிரப்புவதன் மூலம் தஞ்சை மாநகரில் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக உயரும். இந்த குளங்களுக்கு செல்லும் நீர்ப்பாதை சீரமைக்கும் பணிகள் இன்னும் முழுமை பெறாததால் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இதே போல் அழகி குளம் கொரோனா காலக்கட்டத்தின் போது அந்த பகுதி பொதுமக்களின் சார்பில் சுத்தப்படுத்தப்பட்டு கல்லணைக்கால்வாயில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டது. அதன் பின்னர் குளம் மாநகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டது. அதன் பின்னர் நீர் நிரப்படவில்லை. கல்லணைக்கால்வாயில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அகழி வழியாக சிவங்கை பூங்கா குளம் மற்றும் அய்யன்குளம், சாமந்தான்குளம் மற்றும் பிற குளத்துக்கும் தண்ணீர் செல்லும் வகையில் பாதை இருந்தது. இந்த நீர்வழிப்பாதை குறிப்பிட்ட தூரம் கண்டறியப்பட்ட நிலையில் அதன்பின்னர் அப்படியே பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன.
நீர் மட்டம் குறைந்தது
இதே போல் ராணி வாய்க்கால் வழியாக அழகி குளத்துக்கும் தண்ணீர் செல்லும். அந்த பணிகளும் இன்னும் சீர் செய்யப்படாமல் இருக்கின்றன. இதில் தற்போது அய்யன்குளம், சாமந்தான் குளத்தில் மழைகாலத்தில் பெய்த தண்ணீர் மட்டுமே தேங்கி கிடக்கிறது. அழகி குளம் தண்ணீர் இன்றி புல், புதர்கள் நிறைந்து காணப்படுகின்றன.
தற்போது கல்லணைக்கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும் அகழி பகுதிக்கு இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் அகழி காய்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது. அகழி மற்றும் குளங்களுக்கு நீர் நிரப்பப்படாததால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டும் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் ஆழ்துளை கிணறுகளிலும் நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.
பொதுமக்கள் வலியுறுத்தல்
எனவே கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அதனை பயன்படுத்தி உடனடியாக அகழியிலும், சிவங்கை பூங்கா குளம், அய்யன்குளம், சாமந்தான் குளம், அழகி குளம் உள்ளிட்ட குளத்திற்கும் தண்ணீர் கொண்டு சென்று நிலத்தடி நீர் மட்டம் உயர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.