புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் தண்ணீர் திறப்பு-5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்
புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
வாழப்பாடி:
புழுதிக்குட்டை ஆனைமடுவு
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் குறுக்கே புழுதிக்குட்டை கிராமத்தில் 67.25 அடி உயரத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால் குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த பரவலான மழையால் அணையின் நீர்மட்டம் 52.55 அடியாக உயர்ந்து தண்ணீர் தேங்கியது.
தண்ணீர் திறப்பு
இந்தநிலையில் 2 மாதங்களாக வாழப்பாடி பகுதியில் மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே ஆனைமடுவு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டும் என புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனம் மற்றும் பழைய ஆயக்கட்டு ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடந்த மாதம் (பிப்ரவரி) 23-ந் தேதி காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 நாட்களுக்கு ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்கான வசிஷ்டநதியில் தண்ணீர் திறக்கப்பட்டது.
Water was opened in Anaimatuvu dam. 5 thousand acres of land will get irrigation facility.
நேற்று முதல் 11 நாட்களுக்கு வலது வாய்க்கால் மற்றும் இடது வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். விழாவில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் கீதாராணி, வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வாழப்பாடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சக்கரவர்த்தி, ஏற்காடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவழகன், கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.