குளத்தில் இருந்து ரோட்டில் வழியும் தண்ணீர்
ஆத்துகிணத்துப்பட்டியில் குளத்தின் கரையை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆத்துகிணத்துப்பட்டி
தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது குளம், குட்டை, தடுப்பணைகள் ஆகும். குடிமங்கலம் ஒன்றியத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட குளம்,குட்டை,தடுப்பணைகள் உள்ளன. மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் சேமித்து வைக்கப்படும்போது அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது.
குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்டது ஆத்து கிணத்துப்பட்டி. ஆத்துகிணத்துப்பட்டியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆத்து கிணத்துப்பட்டியில் ஊருக்கு அருகே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளம் தற்போது நிரம்பியுள்ளது.
நடவடிக்கை
குளம் நிரம்பி உள்ளதால் குளத்தை ஒட்டிய கரை பகுதியில் இருந்து தண்ணீர் கசிந்து ரோட்டில்செல்கிறது. குளம் நிரம்பும் சமயத்தில் மட்டுமே கரையோரம் தண்ணீர் தேங்கி ரோட்டில் வழிந்து செல்வதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து குளத்தை ஆழப்படுத்த வேண்டும்.குளத்தின் கரையில் தண்ணீர் வழிந்து ரோட்டில் செல்வதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து தண்ணீர் வழிந்து ரோட்டில் செல்லாதவாறு குளத்தின் கரையை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.