பொது இட ஆக்கிரமிப்பை மீட்டு மேல்நிலைத்தொட்டி கட்ட வேண்டும்


பொது இட ஆக்கிரமிப்பை மீட்டு மேல்நிலைத்தொட்டி கட்ட வேண்டும்
x
திருப்பூர்


தாராபுரம் அருகே ஆக்கிரமிப்பில் உள்ள பொது இடத்தை மீட்டு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பொது இடம் ஆக்கிரமிப்பு

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தாராபுரம் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட எலப்பநாயக்கன்வலசு ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட வீடுகளில் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் பொது பயன்பாட்டுக்கான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். இதன்காரணமாக எங்கள் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய மேல்நிலைத்தொட்டி கட்ட அனுமதி கிடைத்து 1½ ஆண்டுகள் ஆகியும், நிலம் இல்லாமல் குடிநீர் தொட்டி கட்ட முடியவில்லை.

அரசு அதிகாரிகள் பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற முனைப்பு காட்டாமல் உள்ளனர். குடிநீர் தொட்டி அமைக்காததால் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். விளையாட்டு மைதானமும் இல்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். எங்களுக்கு மயானம் வசதியில்லை. இறந்தவர்களை ரோட்டின் கரையோரம் புதைத்து வருகிறோம். இந்தநிலையில் அருகில் உள்ள தோட்டத்தை சேர்ந்தவர்கள் நிலத்தை சமப்படுத்தி பாதையாக மாற்றிவிட்டனர். இதனால் மயானவசதியில்லை. எங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்து மயானவசதி ஏற்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

போலி ஆவணம் மூலம் கிரையம்

தாராபுரம் சின்னபுத்தூர் புளியமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சபரீசன் என்பவர் அளித்த மனுவில், 'எங்களின் பூர்வீக சொத்து தாராபுரம் பகுதியில் உள்ளது. 9 ஏக்கர் 78 சென்ட் அளவுள்ள நிலத்தை தனியார் ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்துள்ளார். இது கடந்த 2015-ம் ஆண்டு எங்களுக்கு தெரியவந்தது. சம்பந்தப்பட்ட இடத்தில் வில்லங்கம் இருந்தும், கிரையம் செய்ய அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து கலெக்டர், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தேன். பதிவுத்துறையினர் தகுந்த பதில் கொடுக்காமல் உள்ளனர். போலி ஆவணம் மூலம் செய்த கிரையத்தை ரத்து செய்து, வாரிசுதாரர்களுக்கு நிலம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்.


Next Story