நல்லூர் நீர்வீழ்ச்சியின் மேல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம்


ஏற்காட்டில் நல்லூர் நீர்வீழ்ச்சியில் தந்தை-மகள் பலியான சம்பவத்தை அடுத்து, நீர்வீழ்ச்சியின் மேல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

சேலம்

ஏற்காடு

ஏற்காட்டில் நல்லூர் நீர்வீழ்ச்சியில் தந்தை-மகள் பலியான சம்பவத்தை அடுத்து, நீர்வீழ்ச்சியின் மேல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

தந்தை-மகள் பலி

ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நல்லூர் நீர்வீழ்ச்சி. இதில் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து அடிபடுவதும், அடிக்கடி உயிர் சேதம் ஏற்படுவதும் நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்த பாலமுரளி (வயது 42), அவருடைய மகள் சவுமியா (13) ஆகிய 2 பேர் மனைவி மற்றொரு மகள் கண் எதிரே நீர்வீழ்ச்சியையொட்டி உள்ள பாறையில் ஏறிய போது தடுமாறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

போலீசார் அறிவுறுத்தல்

இது குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் கூறியதாவது:- ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வருபவர்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க தான் ஏற்காட்டுக்கு வருகிறார்கள். வந்த இடத்தில் தங்களது பாதுகாப்பை முதலில் உறுதி செய்து கொண்டு பிறகு ஆனந்தமாக விளையாடி மகிழ வேண்டும்.

மேலும் நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு தற்போது செல்பவர்கள் பாதுகாப்பாக சென்று வர வேண்டும். அங்கு விரைவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக நீர்வீழ்ச்சியின் மேல் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று போலீசார் சுற்றுலா பயணிகளை அறிவுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story