நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்
பராமரிப்பு இல்லாத நீராதாரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைநீர் சேகரிப்பு திட்டம்
மழைக்காலங்களில் வான் கொடுக்கும் விலை மதிப்பற்ற மழைநீரை தன்னகத்தை தேக்கி வைத்து நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தி எண்ணற்ற உயிரினங்களின் குடிநீர் ஆதாரமாக குளம், குட்டை, அணைகள் மற்றும் தடுப்பணைகள் விளங்கி வருகிறது. தண்ணீரின் மகத்துவம் முக்கியத்துவத்தை உணர்ந்த நமது முன்னோர்கள் நீர் மேலாண்மையை முறையாக செயல்படுத்தி காலத்தே பருவமழையை பெற்றதுடன் நீராதாரங்களை முறையாக தூர் வாரி கண்ணும் கருத்துமாக பராமரிப்பு செய்தும் வந்தனர். இதன் காரணமாக விவசாயம் செழித்ததுடன் குடிநீர் பஞ்சமும் ஏற்படாமல் கட்டுக்குள் இருந்து வந்தது.
இன்று ஒரு குவளை தண்ணீரை பெறுவதற்காக கூட பல ஆயிரங்களை செலவு செய்து ஆயிரம் அடிக்கு ஆழ்குழாய் கிணறு தோண்டும் நிலை வந்துவிட்டது. அதிலும் ஒரு சிலரே வெற்றி அடைகின்றனர். இன்னும் சிலருக்கு ஏமாற்றமும் நஷ்டமும் மிஞ்சுகிறது. இந்த நிலைக்கு முழுக்க முழுக்க அதிகாரிகளின் அலட்சியமும் கவனக்குறைவும் பொறுப்பற்ற தன்மையுமே காரணமாகும். நீராதாரங்களில் தேவையான அளவு நீர்இருப்பு இல்லாததால் கடும் குடிநீர் பஞ்சமும் ஏற்படுவதுடன் விவசாயமும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. எண்ணற்ற விவசாயிகள் தொழிலை கைவிட்டு விட்டு பிழைப்பைத் தேடி மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். இதனால் பரம்பரை பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்த குடும்பம் அடுத்த தலைமுறை விவசாயத்தை துறக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதை தாமதமாக உணர்ந்த அரசு நிர்வாகம் வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தொழில் நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தியும் நீராதாரங்களை தூர்வாருவதற்கும் நடவடிக்கை எடுத்தது. ஆனால் பணிகள் ஏட்டளவில் எழுத்தளவில் அலுவலகத்திலேயே முடங்கி விடுகிறது. அத்தி பூத்தாற்போல் ஒரு சில பகுதியில் மட்டுமே பெயரளவிற்கு தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அடை மழை காலத்தில் கூட நீராதாரங்கள் நீர் இருப்பை பெறமுடியாமல் தவித்து வருகிறது.
தடுப்பணை
அதை உணர்த்தும் விதமாக உடுமலையை அடுத்த பெரிசனம்பட்டி அருகே உள்ள தடுப்பணை நீர்இருப்பை பெறமுடியாமல் வறண்டு கிடக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையிலும் ஒருசொட்டு தண்ணீர் கூட தடுப்பணையை சென்று அடையவில்லை.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நீர்வழித்தடங்கள் சரியான அளவில் பராமரிப்பு இல்லாததே ஆகும்.இதே போன்று தான் தளி, அமராவதிக்கு உட்பட்ட பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட நீராதாரங்கள் நீர்இருப்பை பெறமுடியாமல் தவித்து வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமங்கள் தோறும் உள்ள நீராதாரங்களையும் அதற்கு நீர்வரத்தை அளிக்கக்கூடிய நீர்வழித் தடங்களையும் ஆய்வு செய்து அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக தூர் வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை முழுமையாக சேமித்து நீர் இருப்பை உயர்த்திக் கொள்ள முடியும். அது மட்டுமின்றி எதிர்காலத்தில் ஏற்பட போகும் தண்ணீர் பஞ்சத்தையும் முழுமையாக தடுக்க இயலும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.