குழாய் உடைந்து குடிநீர் வீணானது
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து, திருமூர்த்தி நகரில் உள்ள நகராட்சி தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்திற்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பிரதான குழாய்கள் மூலம் உடுமலை நகராட்சி பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு ஏற்றப்படுகிறது. பின்னர் அங்கிருந்து பகிர்மான குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருமூர்த்தி நகரில் உள்ள, உடுமலை நகராட்சிக்கு சொந்தமான தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்தில் உள்ள மின் உந்துகள்பழுதடைந்திருந்ததால், புதியதாக மின் உந்துகள் பொருத்தப்பட்டு, பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 21-ந்தேதி மற்றும்22 -ம்தேதி ஆகிய 2 நாட்கள் உடுமலை நகராட்சி பகுதி முழுவதும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருமூர்த்தி நகரில் உள்ள நகராட்சி தலைமை குடிநீர் நீரேற்று நிலைத்தில் பணிகள் நிறைவடைந்ததைத்தொடர்ந்து நேற்று வழக்கம்போல் நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அப்போது உடுமலை தங்கம்மாள் ஓடை வீதியில் உள்ள பிரதான குழாயில் குடிநீர் சென்று கொண்டிருந்த போது அழுத்தம் தாங்காமல் குழாய் உடைந்தது. அதனால் அருகில் உள்ள எம்.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் செல்லவில்லை. இதைத்தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் அங்கு வந்து உடைந்த குடிநீர் குழாயை அகற்றிவிட்டு மாற்றுகுழாய் பொருத்தி சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். இந்த பணிகள் நகராட்சி தலைவர் மு.மத்தீன் முன்னிலையில் நடந்தது.