பவானிசாகர் அணையில் இருந்து 3 நாட்களில் மீண்டும் தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து 3 நாட்களில் மீண்டும் தண்ணீர் திறப்பு
திருப்பூர்
கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் கரை சீரமைக்கும் பணி முடிந்ததும், பவானிசாகர் அணையில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு தண்ணீர் மீண்டும் திறக்கப்படும் என்று கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
பிரதான கால்வாய் கரை சேதம்
கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து 2022-23-ம் ஆண்டில் முதல் போக நஞ்சை பாசனத்துக்கு 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் முதல் தண்ணீர் கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி காலை 11 மணிக்கு கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயில் மைல் 6.4-ன் இடதுகரையில் சிறிய பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தால் பெரிய பாதிப்பு ஏற்படாதவாறு தடுக்கும் வகையில் உடனே பவானிசாகர் அணையில் இருந்து வழங்கப்பட்டிருந்த 2,300 கனஅடி தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த தண்ணீர் அளவு குறைவதற்குள் ஏற்கனவே ஏற்பட்ட பள்ளம் பெரிதாகிவிட்டது. அந்த பகுதியில் கரைகளில் எந்தவித உடைப்பும் ஏற்படவில்லை. இதனால் விவசாய நிலங்கள், விவசாயிகளின் உடைமைகளுக்கு சேதம் ஏற்படவில்லை.
3 நாட்களில் திறப்பு
தற்போது தண்ணீர் பிரதான கால்வாயில் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டதால் பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சேதமடைந்த தலை மதகு சுவர் மற்றும் பேரல் ஆகியவை உடனடியாக சீரமைக்கப்பட்டு 3 நாட்களில் பவானிசாகர் அணையில் இருந்து பிரதான தண்ணீர் மீண்டும் திறக்கப்படும். தற்போது அனைத்து பாசன பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால், பிரதான கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்படுவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.