கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறை நிறைவு நாளில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.
அலைமோதிய சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசன் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை பார்த்து ரசிக்க கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அதன்படி கோடை விடுமுறை நிறைவு நாளான நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகாலை முதற்கொண்டே வாகனங்களில் வரத்தொடங்கினர். நேரம் செல்ல செல்ல வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருந்தது.
ஆங்காங்கே ஏற்பட்ட வாகன நெரிசலுக்கு பிறகு கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வந்து சேர்ந்தனர். மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர் ராக், குணா குகை, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
முகடுகளை முத்தமிட்ட மேககூட்டம்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான பூக்களை பார்த்து ரசித்தனர். புன்னகை சிந்தும் பூக்களோடு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தனர்.
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், பசுமை போர்த்திய மலைமுகடுகளை மேககூட்டங்கள் அவ்வப்போது முத்தமிட்டு சென்ற ரம்மியமான காட்சி சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்தது.
கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள செயற்கை நீரூற்றுகளின் அழகை ரசித்தப்படி சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர். கொடைக்கானலில் நிலவிய இதயத்தை வருடும் இதமான வானிலையை, சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.