இருள் சூழ்ந்த நடைபாதையில் செல்போன் வெளிச்சத்தில் நடந்து செல்லும் பெண்கள்


இருள் சூழ்ந்த நடைபாதையில் செல்போன் வெளிச்சத்தில் நடந்து செல்லும் பெண்கள்
x
திருப்பூர்


திருப்பூர் அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழாக ஊத்துக்குளி ரோடு மற்றும் ரெயில் நிலையத்திற்கு செல்லும் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதை இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

எரியாத தெருவிளக்குகள்

இந்த நடைபாதையின் இரு பக்கங்களிலும் தெருவிளக்குகள் உள்ளன. இந்த தெருவிளக்குகள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளன. இதனால் இதில் உள்ள மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. இதேபோல் சில மின்கம்பங்களில் கம்பம் முழுவதையும் மறைத்தபடி கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. பல மாதங்களாகவே இங்குள்ள மின்கம்பங்கள் எரியாமல் உள்ளன. ஆனாலும் இவை கவனிப்பாரின்றி அப்படியே விடப்பட்டுள்ளது. சில மின்கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இந்த வழியாக பாலத்தில் இருந்து நடந்து வரும் பொதுமக்களும், ரெயில் நிலையம் மற்றும் ஊத்துக்குளி ரோட்டில் இருந்து வரும் பொதுமக்களும் நடந்து செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி இருள் சூழ்ந்து இருப்பதால் இவ்வழியாக நடந்து செல்வதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

பெண்கள் அவதி

குறிப்பாக இரவு நேரங்களில் கடைகள், பனியன் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி முடிந்து வரும் பொதுமக்கள் இருள் சூழ்ந்த இந்த நடைபாதையில் செல்லும் போது அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். இதையொட்டி இருக்கும் ஒரு வங்கியில் உள்ள மின்விளக்கின் வெளிச்சம் ஓரளவு வருவது சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது. இருந்தாலும் நடைபாதையின் பெரும்பகுதி கும்மிருட்டாக இருப்பதால் பெண்கள் செல்போனில் உள்ள விளக்கை ஒளிர விட்டபடி நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இங்கு சமூக விரோதிகள் பதுங்கி இருந்தாலும் வெளியே தெரியாது என்பதால் இவ்வழியாக நடந்து செல்பவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பெண்கள் இந்த நடைபாதையின் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதியை அடையும் வரை உயிரை கையில் பிடித்தபடி செல்கின்றனர். எனவே நீண்ட நாட்களாகவே கவனிப்பாரின்றி உள்ள தெருவிளக்குகளை பராமரித்து இங்கு வெளிச்சம் வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.


Next Story