அண்ணாமலையின் பொய் புகாரை சந்திக்க தயாராக உள்ளோம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
அண்ணாமலையின் பொய் புகாரை சந்திக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:
அண்ணாமலையின் பொய் புகாரை சந்திக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
2 ஊழல் குற்றச்சாட்டு
நாகர்கோவிலில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள 2 ஊழல் புகார் குறித்து பதில் அளிக்க தயாராக உள்ளோம். இது பொய்யான குற்றச்சாட்டு. எங்கள் மீது ஊழல் பட்டியல் சுமத்தாதவர்களே இல்லை. திறன்பட ஆட்சி நடத்தினாலே இப்படி ஊழல் புகார் வருவது வழக்கமானது தான். தலைவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அப்படி சுமத்தப்பட்ட புகார்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக கருணாநிதி ஆட்சி செய்து, மக்களுக்காக வாழ்ந்து சேவையாற்றியவர். அவரது வழிவந்த தொண்டர்களாகிய நாங்கள், எப்படிப்பட்ட பொய் புகாரையும் சந்திக்க தயாராக உள்ளோம். எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. எதிர்க்கட்சியினர் கடந்த ஆட்சியில் புகார் அளித்த போது இன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு நேரடியாக சென்றவர். பின்னர் அந்த புகார், பொய் புகார் என தெரிவிக்கப்பட்டது.
தமிழர் நலவாரியம்
கடந்த கால ஆட்சியிலோ புகார் என்று வந்தாலே அதன் மீது விசாரணை நடத்த தடை கோரினார்கள். தற்போது மற்ற மாநிலங்களில் நடைபெறும் சில விஷயங்களை இங்கே சுட்டிக்காட்டி தமிழகத்தில் சகோதரத்துவத்தை குலைக்க நினைக்கிறார்கள். அது எப்போதும் நடக்காது. வெளிநாட்டு வாழ் மக்களுக்கு அரணாக இருக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதி, கடந்த 2010-ம் ஆண்டு வெளிநாட்டு வாழ் தமிழா்கள் நலத்துறையை அமைக்க அடித்தளம் அமைத்தார்.
பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் அதனை கிடப்பில் போட்டுள்ளார்கள். மீண்டும் இந்த துறையை உருவாக்கி, வெளிநாட்டு வாழ் மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டில் உயிரிழப்பவர்களின் உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் அரசு தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
மாணவர்களுக்கு உதவித்தொகை
மத்திய அரசு குறிப்பிட்ட அளவு சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்க இலக்கை நிர்ணயித்துள்ளது. இதனை அதிகரிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. மத்திய அரசு வழங்கவில்லை என்றால் உதவித்தொகையை தமிழக அரசே வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
----------