கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க நாங்கள் தயார்
ஓசூர்:-
ஓசூரில் மே தின விழாவையொட்டி அ.தி.மு.க. (ஓ.பன்னீர்செல்வம் அணி) சார்பில் தொழிலாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. இதனை கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூரு புகழேந்தி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க. பொதுக்குழு கலைக்கப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் போட்டியிடும் தேசிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் எங்களிடம் ஆதரவை கேட்டு வருகின்றனர். பா.ஜனதாவும், காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் ஆதரவை கேட்டு வருகிறார்கள், யாருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்? என ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்வார். அவர் அறிவித்தால், அங்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு கூட ஆதரவை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் ராஜேந்திர கவுடா, மாநில சிறுபான்மை நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜான் திமோதி, பெங்களூரு மாவட்ட செயலாளர் பொம்மனள்ளி முனிரத்தினம், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் வெங்கடசாமி, சோலைராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.