தண்ணீரை விலைக்கு வாங்கி நெற்பயிர்களை காப்பாற்றி உள்ளோம்'-நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க விவசாயிகள் கோரிக்கை
தண்ணீரை விலைக்கு வாங்கி நெற்பயிர்களை காப்பாற்றி உள்ளோம். எனவே நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
தண்ணீரை விலைக்கு வாங்கி நெற்பயிர்களை காப்பாற்றி உள்ளோம். எனவே நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மழை இல்லை
ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமி என்றே சொல்லலாம்.அதுபோல் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் நெல் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்குகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து ஆர்.எஸ்.மங்கலம் யூனியனுக்கு உட்பட்ட சோழந்தூர், வடவயல், மங்கலம், திருப்பாலைக்குடி, பத்தனேந்தல் உள்ளிட்ட 100-க்கும் அதிகமான கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் பருவமழை சீசனிலோ, கடந்த ஆண்டு முழுமையாக மழை பெய்யாததால் ஆர்.எஸ்.மங்கலம் யூனியனுக்கு உட்பட்ட சம்பை, பத்தனேந்தல், சோழந்தூர், வடவயல், திருப்பாலைக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகிப் போய்விட்டன.
விலைக்கு வாங்கி...
ஒரு சில கிராமங்களில் கடந்த ஆண்டு பெய்த கண்மாயில் தேங்கியிருந்த நீரை மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி நெற்பயிரை விவசாயிகள் காப்பாற்றி உள்ளனர்.சம்பை, பத்தனேந்தல் உள்ளிட்ட பல கிராமங்களில் விலைக்கு தண்ணீர் வாங்கி நெற்பயிர்களை காப்பாற்றி உள்ளனர். சம்பை, பத்தனேந்தல், திருப்பாலைக்குடி பல கிராமங்களிலும் விளைச்சல் ஆன நெற் பயிர்களை எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி தீவிரமாகவே நடைபெற்று வருகின்றது.
இது குறித்து விவசாயிகள் கூறும் போது, கடந்த ஆண்டு பருவ மழையே இல்லாததால் ஆர்.எஸ்.மங்கலம் யூனியனுக்குட்பட்ட 100-க்கும் அதிகமான கிராமங்களில் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிப் போய்விட்டன.
ஒரு சில கிராமங்களில் மட்டும் கண்மாய்களில் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து பாய்ச்சி நெற்பயிர்களை காப்பாற்றி உள்ளோம். ஓரளவு விளைந்த நெல்லுக்காவது நல்ல விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.