உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து தெளிவாக அறிந்து கொண்டோம் மாணவ-மாணவிகள் பேட்டி


பேட்டிinterview

திருச்சி

திருச்சி, ஜூன்.7-

'தினத்தந்தி' கல்வி கண்காட்சியில், உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து தெளிவாக அறிந்துகொண்டோம் என்று மாணவ-மாணவிகள் கூறினர்.

மாணவி சவுமியா (துப்பாக்கி தொழிற்சாலை பகுதி):-

'தினத்தந்தி' கல்வி கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கலை அறிவியல் பாடப்பிரிவில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வதற்காக பெற்றோருடன் வந்தேன். ஒவ்வொரு அரங்குகளாக சென்று கல்லூரிகளில் கல்விக்கட்டணம், செமஸ்டர் கட்டணம், விடுதி கட்டணம் போன்ற பல்வேறு விவரங்களை தெளிவாக தெரிந்து கொண்டேன். விளக்க கையேடுகளை பெற்றுள்ளேன். வீட்டுக்கு சென்று பொறுமையாக யோசித்து முடிவு செய்ய வேண்டும். என்னை போல் நிறைய மாணவ-மாணவிகள் 'தினத்தந்தி' கல்வி கண்காட்சிக்கு வந்து பயன்பெற வேண்டும். உயர்கல்வி படிப்பு குறித்து மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதைவிட நாமே கண்ணால் பார்த்தும், நேரடியாக விவரங்களை கேட்டும் வேலை வாய்ப்புகள் போன்ற விவரங்களை தெரிந்து கொள்வதே நல்லது.

மாணவர் மோகேஷ் (கம்பரசம்பேட்டை) :-

என்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்ற ஆசையில் கண்காட்சிக்கு வந்தேன். கண்காட்சியை பார்த்தவுடன் உயர்கல்வியில் என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது. தற்போது என்ஜினீயரிங் படிப்பில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளது. வேலைவாய்ப்புகள் எவ்வாறு கிடைக்கும். கல்லூரியிலேயே வளாகத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்கிறார்களா? போன்ற பல்வேறு தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டேன். மேலும், ஒரு சில கல்லூரிகளில் பிளஸ்-2 பாடத்தில் அதிக மதிப்பெண்களை பெற்று இருந்தால் கல்வி கட்டணம் குறையவும் வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு கல்வி நிறுவனங்கள் கொடுத்த விளக்க கையேடுகளை வாங்கியுள்ளேன். வீட்டுக்கு சென்று பெற்றோருடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

மாணவி அபினயா (முசிறி காட்டுப்புத்தூர்):-

பிளஸ்-2 முடித்த பிறகு என்ன படிக்கலாம் என குழப்பமாக இருந்தது. நிறைய பேரிடம் ஆலோசனைகளை கேட்டு வந்தேன். எந்த படிப்புக்கு மதிப்புள்ளது. எந்த படிப்பு படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றி 'தினத்தந்தி' கல்வி கண்காட்சிக்கு வந்து தெரிந்து கொண்டேன். உயர்கல்வி படிக்கும்போது வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, கல்லூரி வளாக தேர்வு, முதல் தலைமுறை பட்டம் பயின்றால் கிடைக்கும் உதவித்தொகை போன்ற பல்வேறு தகவல்களையும், கல்வி கட்டணம், விடுதி கட்டணம் போன்ற விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டேன். கண்காட்சியில் பல்வேறு படிப்புகள் தொடர்பான அரங்குகளை பார்த்தேன். தற்போது பி.டெக். படிக்கலாம் என திட்டமிட்டுள்ளேன்.

மாணவி ஹர்சவர்ஷினி (திருவெறும்பூர்) :-

உயர்கல்வியில் சைக்கலாஜி படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம் என்ற எண்ணத்தில் அது பற்றி ஆலோசனை பெற பெற்றோருடன் கண்காட்சிக்கு வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தபிறகு தான் பிளஸ்-2 முடித்து உயர்கல்வியில் இத்தனை படிப்புகள் உள்ளனவா? என ஆச்சரியம் அடைந்தோம். மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு 'தினத்தந்தி' நடத்தும் இந்த கண்காட்சி எல்லோருக்கும் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு எதிர்காலம் குறித்து திட்டமிட சிறப்பான வாய்ப்பாக உள்ளது. இங்கு நீட் தேர்வு பற்றி கூறினார்கள். கல்வி கட்டணங்கள் குறித்தும், ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு செலவாகும். மொத்தமாக 5 ஆண்டுகளுக்கு என்ன செலவாகும். உதவித்தொகை எப்படி கிடைக்கும் என பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்கள்.


Next Story