யோகாவை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
யோகாவை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
அண்ணாமலைநகர்,
உலக யோகா தினத்தையொட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை விளையாட்டு மைதானத்தில் யோகாசன நிகழ்ச்சி நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு யோகாசன நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மனைவி லெட்சுமி மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து யோகாசனம் செய்தார்.
தொடர்ந்து 83 வயதான பேராசிரியர் கிருஷ்ணன் யோகா செயல்விளக்கம் அளித்தார். இதையடுத்து ராமேசுவரம் மீனவர் சமுதாய மாணவர்களும், கோவில்பட்டியை சேர்ந்த 9 வயது சிறுமி ரவீணா 133 திருக்குறள் அதிகாரத்தை யோகா மூலம் வெளிப்படுத்தினார்.
சீர்காழியை சேர்ந்த கின்னஸ் சாதனை மாணவி சுபானு 108 சிவதாண்டவத்தை நடனம் மூலம் விளக்கினார். மேலும் ஆணிப்படுக்கையின் மீது அமர்ந்தும் யோகாசனம் செய்து அசத்தினார்.
இதில் கடலூர் மட்டுமின்றி சென்னை, விழுப்புரம், நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 850-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
கவர்னர் பார்வையிட்டார்
தொடர்ந்து ஆதரவற்றோர் பள்ளி மாணவர்கள் யோகாசனம், பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதை கவர்னர் ஆர்.என். ரவி, மனைவி லெட்சுமி ரவியுடன் சேர்ந்து பார்வையிட்டார்.
அதன்பிறகு சிறப்பாக யோகாசனம் செய்த மாணவர்கள், ஏற்பாடு செய்தவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
மகிழ்ச்சி
யோகா என்பது நமது நாட்டிற்கு கிடைத்த பரிசு. யோகா சனம் பல நாடுகளை தாண்டி, இனம், மதம், அரசியலை தாண்டி வரவேற்கப்படுகிறது.
நமது நாட்டில் யோகா சிதம்பரத்தில் தொடங்கி, நாடு முழுவதும் பரவி உள்ளது. திருமூலர் திருமந்திரத்தில் யோகாவை பற்றி சொன்னதை பதஞ்சலி முறைப்படுத்தி செயல்படுத்தினார்.
யோகா ஒரு சூத்திரம். உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைக்கவும், நமது வாழ்க்கையை சமப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. நமது மனது பலவற்றை அதிகப்படியாக சிந்திக்கும்போது அதனை ஒருமுகப்படுத்த யோகா உதவுகிறது. நமது உடல் முக்கியம் என்றாலும் நமது மனநிலை மிகவும் முக்கியம். அதனை பாதுகாக்க யோகா பெரிதும் உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள்
தமிழகம் குறிப்பாக சிதம்பரம் யோகாவின் பிறப்பிடமாக உள்ளது. இதை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.
நமது வாழ்க்கை முறையின் காரணமாக அதிக அளவு சர்க்கரை நோயாளிகளை கொண்ட நாடாக உள்ளோம். ஆகவே நமது வாழ்க்கை முறையை யோகாவைக்கொண்டு மாற்றும்போது சர்க்கரை நோய் இல்லாமல் வாழமுடியும்.
உலகின் அனைத்து இடங்களிலும் யோகாவை பரப்ப வேண்டும். மிகவும் குறைந்த செலவில் யோகாவை கற்றுக்கொண்டு நமது உடல் நலத்தை பாதுகாக்க முடியும்.
எனது பள்ளி பருவத்தில் இருந்தே யோகா செய்வதால் நல்ல உடல் நலத்தை பெற முடிந்தது. மருத்துவர்கள் எனது உடல் நலத்தை பரிசோதனை செய்து பார்த்து விட்டு நோயில்லாமல் ஏமாற்றம் அடைந்தனர். எனது உடல் நலத்திற்கு யோகா முக்கிய காரணமாக உள்ளது.
வாழ்வில் ஒரு பகுதி
இதேவேளை அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நியூயார்க் நகரில் உள்ள தலைமை செயலகத்தில் நமது பாரத பிரதமர் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது நமக்கு ஒரு பெருமிதமான நிகழ்வு. யோகாவை நாம் வாழ்வில் ஒரு பகுதியாக கொள்ளும்போது, நம்மால் வாழ்வில் ஏற்படும் அனைத்து ஏற்ற இறக்கங்கள், இன்ப துன்பங்கள், சோதனைகள், சவால்களை நமது உடல் மற்றும் மனநலத்தையும் பாதுகாத்து சிறப்பாக செயல்படுத்த பெரிதும் உதவிபுரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இயற்கை மூலிகை கண்காட்சி
தொடர்ந்து பல்கலைக்கழக கோகலே அரங்கில் யோகா மற்றும் இயற்கை மூலிகை கண்காட்சியை கவர்னர் ஆர்.என். ரவி திறந்து வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் சுவேதாசுமன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் ரத்தின சம்பத், யோகா மைய இயக்குனர் வெங்கடாஜலபதி, உடற்கல்வித்துறை இயக்குனர் செந்தில்வேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பதிவாளர் சிங்காரவேல் நன்றி கூறினார்.