"தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளோம்"-மதுரை பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேச்சு
தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளோம் என மதுரையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார்.
தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளோம் என மதுரையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார்.
பொதுக்கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மேலவளவு போராளிகள் 25-ம் ஆண்டு நினைவு நாள் வீர வணக்க பொதுக்கூட்டம் மதுரை புதூரில் நேற்று நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் மாறி இருக்கிறது. இதே புதூரில் கட்சியின் முதல் கொடியை ஏற்றிவைத்தேன். தற்போது அந்த கொடி தேசிய அளவில் பறக்கிறது. மதுரை மாநகர் என் வாழ்க்கையின் போக்கை மாற்றம் செய்தது. மதுரையில் நடத்திய போராட்டம்தான் என்னை அடையாளப்படுத்தியது.
வாக்கு வங்கியை நிரூபித்துகாட்டாமல் 2 பெரிய கட்சி கூட்டணியிலும் இடம்பெற்ற ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள்தான். பா.ம.க., ம.தி.மு.க.. தே.மு.தி.க. போன்ற கட்சிகள் தேர்தலில் தனித்து போட்டியிட்டு் வாக்கு வங்கியை காட்டிய பின்னர்தான் கூட்டணியில் சேர்ந்தார்கள். இன்றளவும் வாக்கு வங்கியை காட்டாமலே 4 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.களை கொண்டுள்ள கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். எங்களை புறம் தள்ளிவிட்டு, தமிழக அரசியல் இல்லை என்ற நிலை தற்போது உள்ளது. தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ளோம். என்னை நிலை குலைய செய்த சம்பவங்களில் ஒன்று, மேலவளவு சம்பவம்.
கலவரத்தை தூண்டுவதற்கு ஒரு ரவுடி போதும். ஆனால், தொண்டர்களை அமைதிப்படுத்த நல்ல தலைவர் வேண்டும். அம்பேத்கரை ஒழுங்காக படித்தவர்கள் யாரும் சாதியை பற்றி பேசமாட்டார்கள்.
அரசியலமைப்பு சட்டம்
பிறப்பால் உயர்வு, தாழ்வு என சொல்லும் கட்சி பா.ஜ.க.தான். 2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் முதலில் கை வைப்பது அரசியலமைப்பு சட்டத்தின் மீதுதான். அவர்களுக்கு ஒரே எதிரி அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தான்.
ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்முவை எதிர்ப்பதற்கு காரணம், அவர் எந்த கட்சியின் பின்னணியில் இருக்கிறார் என்பதே.
மக்களை ஏமாற்றுவதற்காக பா.ஜ.க., இஸ்லாமியர், தலித் பழங்குடியினருக்கு உயர்ந்த பதவிகளை அளித்து அவர்களையும் தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொள்கிறது. இதன் காரணமாகத்தான் அவரை எதிர்க்கிறோம். அவருடைய கொள்கை எங்களுக்கு எதிரானது. கொள்கை அடிப்படையில்தான் யஷ்வந்த் சின்காவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமின்றி கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.