முன்னோர்கள் தெய்வீக பொருளாக வழிபட்ட நீர்நிலைகளை பாதுகாக்க தவறி விட்டோம் -நீதிபதி வேதனை


முன்னோர்கள் தெய்வீக பொருளாக வழிபட்ட நீர்நிலைகளை பாதுகாக்க தவறி விட்டோம் -நீதிபதி வேதனை
x

முன்னோர்கள் தெய்வீகப்பொருளாக வழிபட்டு வந்த நீர்நிலைகளை பாதுகாக்க நாம் தவறியதன் விளைவை இப்போது சந்திக்கிறோம் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்தார்.

மதுரை,

தென் மாவட்டங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், வணிக நோக்கத்தில் நிலத்தடி நீர் எடுப்பவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை கடந்த 2014-ம் ஆண்டு அரசு வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவது சாத்தியம் இல்லாதது. இதனால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

எனவே இதுதொடர்பான அரசாணை அடிப்படை உரிமைகளை பாதிக்கின்றன என்பதால் அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

மு.க.ஸ்டாலின் அறிவுரை

பின்னர் இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பதற்கான ஒழுங்குமுறைச்சட்டம் சென்னை பெருநகரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் நிலத்தடி நீர் எடுப்பதை கட்டுப்படுத்தும் சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

தண்ணீர் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதது என்பதை 'நீரின்றி அமையாது உலகு' என திருவள்ளுவர் பழங்காலத்திலேயே அறிவுறுத்தியுள்ளார். கடந்த மாதம் 23-ந்தேதி உலக தண்ணீர் தின நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தமிழ் நிலமானது நீர் பயன்பாட்டை தமது பண்பாட்டுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. நீர் இல்லையேல் உயிரில்லை. தண்ணீரை காப்போம். தாய் நிலத்தை காப்போம் என அறிவுறுத்தியுள்ளார்.

நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நம் முன்னோர்கள் தமிழகத்தில் ஏராளமான நீர்நிலைகளை நிறுவினர். ஆனால் பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அல்லது கட்டிடங்களாக மாற்ற அனுமதிக்கப்படுகின்றன.

விளைவை சந்திக்கிறோம்

நம் முன்னோர்கள் நீர்நிலைகளை நிறுவியது மட்டுமின்றி, நீரோடைகள், ஆறுகள், கிணறுகள் போன்ற நீர்நிலைகளையும் தெய்வீகப் பொருளாக கருதி வழிபட்டனர். ஆனால், அதைப் பாதுகாக்கத் தவறி உரிய மரியாதை இல்லாமல் அதையே அசுத்தப்படுத்தியதால், அதன் விளைவுகளை இப்போது நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம்.

நிலத்தடி நீர் இயற்கையின் வரப்பிரசாதம் என்பதை நாம் உணர வேண்டும். அது தற்போதைய உயிரினங்களுக்கு மட்டுமல்ல. வருங்கால சந்ததியினருக்காகவும் பாதுகாக்க வேண்டும். சட்டவிரோதமாகவும், கண்மூடித்தனமாகவும் நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவில் கூறியிருந்தது.

அரசு வக்கீலுக்கு உத்தரவு

அந்த வகையில் வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுப்பதை ஒழுங்குபடுத்தவும், வரைமுறைப்படுத்தவும், மாநில அளவில் ஒரு சட்டத்தை உருவாக்கவும் 2 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள் 13.1.2020-ல் தங்கள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தன. ஆனால், இதுவரை வணிக நோக்கில் நிலத்தடி நீர் எடுப்பதை ஒழுங்குபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவரை நிலத்தடி நீர் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதலை ஏன் பின்பற்றக்கூடாது? இதுகுறித்து அட்வகேட் ஜெனரல் அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story