தமிழில் என்ஜினீயரிங் கல்வியை அறிமுகம் செய்துவிட்டோம்: அமித்ஷாவுக்கு அமைச்சர் பொன்முடி பதில்
12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் என்ஜினீயரிங் கல்வியை அறிமுகம் செய்து விட்டோம் என்று மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார்.
சென்னை,
தமிழ்மொழி மிகவும் தொன்மையானது. இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த மொழியின் அருமையை தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புகளில் தமிழ்வழியில் பாடத்திட்டங்களை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசியிருக்கிறார்.
அன்னை தமிழ் மொழி மீது உள்துறை மந்திரிக்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்திற்கும், அக்கறைக்கும் முதலில் தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கல்வி நிதி உதவி
கல்லூரிகளில் தமிழ்வழி கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நிதி உதவி அளிக்கும் திட்டம் தி.மு.க. ஆட்சிப்பொறுப்புக்கு வந்த 1967-68-ல் அறிவிக்கப்பட்டு, அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ஆண்டிற்கு தமிழ்வழியில் பயிலும் ஒரு மாணவருக்கு 900 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமும் தி.மு.க. அரசின் திட்டம்தான்.
12 ஆண்டுகளுக்கு முன்பே...
மத்திய உள்துறை மந்திரி இப்போது சுட்டிக்காட்டியுள்ள என்ஜினீயரிங் பட்டப்படிப்பை முதன் முதலில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி 2010-ம் ஆண்டே அறிமுகப்படுத்தி விட்டார். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக என்ஜினீயரிங் படிப்பினை தாய்மொழியில் கற்க ஏற்பாடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டிட (சிவில்) மற்றும் எந்திர (மெக்கானிக்கல்) என்ஜினீயரிங் படிப்புகளை தமிழில் அறிமுகம் செய்து, தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழில் என்ஜினீயரிங் கல்வி இன்றும் நடைமுறையில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளிலும் தமிழில் என்ஜினீயரிங் படிப்பு நடைமுறையில் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதன் அடுத்தகட்டமாக, இப்போது 2022-2023-ம் ஆண்டு முதல் பட்டய படிப்புகளிலும் மேற்கண்ட பாடப்பிரிவுகள் தமிழ்வழியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காக என்ஜினீயரிங் பட்டப்படிப்பிற்கான புத்தகங்கள் தமிழ்வழியில் வெளியிடப்பட்டுள்ளன. 12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்வழியில் என்ஜினீயரிங் கல்வி தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு விட்டாலும், மருத்துவ படிப்பு, அதாவது எம்.பி.பி.எஸ். தமிழில் கற்பதற்கும் வழி செய்யவும் இப்போது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவ படிப்பு நூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நடந்து வருகிறது.
கட்டாயத்தமிழ்
எங்கள் அன்னை தமிழ் மீது காட்டியுள்ள அக்கறையோடு, சமஸ்கிருதத்திற்கு இணையாக உயர்தனி செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதி உதவி அளித்திடவும், உள்துறை மந்திரியே ஒப்புக்கொண்டிருப்பது போல், தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித்தகுதியை மத்திய அரசு அலுவலகங்களில் அளித்திடவும் தேவையான முயற்சிகளை எடுத்திட வேண்டும்.
தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத்தமிழ் பாடத்திட்டத்தை அமல்படுத்தவும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள தமிழ்ப்பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்பி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.