வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிக்கு வர செய்ய வேண்டும்
பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிக்கு வர செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளிக்கு வர செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது குறித்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-
பல்வேறு காரணங்களால் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு வரவழைக்க வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஊக்கத்தொகை
மேலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் சென்றடைவதில் உள்ள இடர்பாடுகளை சரி செய்ய வேண்டும்.
இதற்காக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை, வங்கிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து முகாம்கள் நடத்தி ஊக்கத்தொகைகள் மாணவர்களுக்கு விரைவில் சென்றவடைய உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சாந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.