மனுக்களை மட்டும் பெறாமல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும்
மனுக்களை மட்டும் பெறாமல் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் அந்தந்த பகுதியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பழனி வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு பழனி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கவுசிகா தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருவாய்த்துறை, கால்நடைத்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், கீரனூர் பகுதி விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது, விவசாயிகள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம் எனவும், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு விவசாயிகள் சார்பில், பெயரளவில் கூட்டத்தை நடத்தி மனுக்களை பெறாமல், பிரச்சினைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் விவசாயிகள் பலர் தங்களது கோரிக்கைளை தெரிவித்தனர்.
விரைந்து நடவடிக்கை
அதில் கீரனூர் ராஜாம்பட்டியை சேர்ந்த விவசாயி சின்னச்சாமி கூறும்போது, எங்கள் பகுதியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் அந்த வழியே விவசாயிகள், பொதுமக்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுபற்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது சம்பந்தப்பட்ட நிலம் பற்றி அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.
காட்டுயானை அட்டகாசம்
இதற்கிடையே ஒட்டன்சத்திரம் வடபருத்தியூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மனு ஒன்றை அளித்தனர். அதில், எங்களது பகுதியில் நிலசீர்த்திருத்த சட்டப்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அது தற்போது வரை பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதுபற்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோம்பைப்பட்டி, சத்திரப்பட்டி பகுதிகளில் தோட்டங்களில் காட்டுயானை புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.