தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க எங்களுக்கு உள்ள கால அவகாசத்தை எடுத்துகொள்கிறோம்


தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க எங்களுக்கு உள்ள கால அவகாசத்தை எடுத்துகொள்கிறோம்
x

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க எங்களுக்கு உள்ள காலஅவகாசத்தை எடுத்து கொள்கிறோம் என்று தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஊக்கத்தொகை

பெண்கள் எங்கெல்லாம் ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் எங்களின் பங்கு இருக்கும். அதனால்தான் புதுச்சேரியில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஏற்கனவே கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் குறை கூறுகிறார்கள். ஒரு மாதம் தருவார்கள், இரண்டு மாதம் தருவார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள். புதுவை முதல்- மந்திரி ரங்கசாமி சொன்னபடி உறுதி செய்யப்பட்டபடி அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்கள்.

அதே போல் வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று இரண்டு மணி நேரம் பெண்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. பெண்களுக்கு பணமும் தருகிறோம், அதே நேரத்தில் வீட்டில் வேலை செய்ய உதவ இரண்டு மணி நேரம் சலுகையும் தருகிறோம். இதன்மூலம் பெண்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம்.

பெண்களுக்கு ரூ.1,000 வழங்க வில்லை

இங்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன் என கூறிவிட்டு இதுநாள் வரை தரவில்லை. புதுச்சேரியில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கான பாரத பிரதமரின் காப்பீடு திட்டம் புதுச்சேரியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு பரிசுகளை பெற்றுள்ளது. அதேபோல் சிறு தானியம், பூக்கள் உள்ளிட்ட விவசாயப் பணிகளை ஊக்கப்படுத்த மத்திய மந்திரி உதவுவதாக உறுதி அளித்துள்ளார்.

எல்லா வகையிலும் புதுச்சேரி மாநிலம் முன்னேறி வருகிறது. 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். அதற்காக நான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் மனதின் குரல் நிகழ்ச்சி மக்கள் இடையே சமுதாய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜிப்மர் மருத்துவமனையில் முறைகேடுகள் என தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. வெளியில் செய்யப்படும் பரிசோதனைகளுக்கு ரூ.5 ஆயிரம் ஆகிறது. ஆனால் ஜிப்மரில் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழை எளியவர்களுக்கு கட்டணம் இல்லை. கவர்னராக பெண் இருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. அரசியலிலும் பிரச்சினை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கால அவகாசம்

சட்டமன்றத்தில் நிறைவேற்றும் தீர்மானங்களை கவர்னர்கள் தாமதப்படுத்துகிறார்களே என்ற கேள்விக்கு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க எங்களுக்கு உள்ள கால அவகாசத்தை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்றார்.


Next Story