அ.தி.மு.க.வுக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரனை தவிர அ.தி.மு.க.வுக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து ஈரோடு மரப்பாலம், ஓடைமேடு ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.வினர் ஜனநாயகத்துக்கு விரோதமாக, கேலிக்கூத்தாக தேர்தலை சந்திக்கின்றனர். சிறப்பாக ஆள முடியாத தி.மு.க. அரசு, கூட்டணி கட்சிக்காக செலவு செய்கிறது. இந்த தேர்தலில் தோற்றால், அது நாடாளுமன்ற தேர்தலிலும் கடுமையாக எதிரொலிக்கும் என்பதால், பணத்தை வழங்கி அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.
ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வால் தி.மு.க.வை மக்கள் புறக்கணித்துவிட்டனர். சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படவில்லை. கியாஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுக்கப்படவில்லை.
பரிசு பொருட்கள்
இதையெல்லாம் மக்கள் மறந்துவிட்டதாக நினைத்து கூச்சம் இல்லாமல் 85 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் என பண மழையாக கொட்டுகிறார்கள். பரிசு பொருட்களான குடம், குக்கர் போன்றவற்றை வழங்குகின்றனர்.
அதையும் மீறித்தான் எங்கள் பிரசாரத்துக்கு மக்கள் வருகின்றனர். எங்களுக்குத்தான் அவர்கள் ஓட்டு போடுவார்கள். 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கையை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே தர்மயுத்தம் என்று சசிகலாவையும், அவரது குடும்பத்தையும் எதிர்த்து நடத்தினார். வெட்கமே இல்லாமல், அந்த குடும்பத்துடன் இணைந்து உள்ளார். தினகரனுக்கும், சசிகலாவுக்கும் ஆதரவு கொடுக்கிறார். இத்தனையும் செய்துவிட்டு தற்போது 2.0 என்ற தர்மயுத்தம் என்றால் மக்கள் சிரிக்க மாட்டார்களா?. இது 2-வது தர்மயுத்தமில்லை. அது கர்மயுத்தம். அவர் ஆட்டகளத்தில் இல்லை. ஈரோடு மாவட்டத்தில் அவரது குழுவில் உள்ள மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து விலகிவிட்டார். அவரது வேட்பாளர் வாபஸ் பெறாமலேயே, அவரது மனு தள்ளுபடியாகி விட்டது.
அரவணைப்பு
இரட்டை இலை சின்னம் பறிபோய்விடக்கூடாது என்பதற்காகத்தான், விலகி இருப்பதாக கூறுகிறார். அவரிடம் யார் இருக்கிறார்கள். தலைமை கழக நிர்வாகி உள்பட எந்த நிர்வாகியும் அவருடன் இல்லை.
எங்களுடன் மாவட்ட செயலாளர் முதல் கிளை செயலாளர் வரை அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாக உள்ளோம். ஒருத்தர் கூட அவர் பக்கம் இல்லை. அவரது நிழலே, அவரைத்தொடராது என்பதை விரைவில் உணர்வார். அ.தி.மு.க.வுக்கு ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரனை தவிர யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.