தங்க கவசத்தை நாங்களே பெற்று தேவர் சிலைக்கு அணிவிப்போம்-தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் பேட்டி
அ.தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினரும் வேண்டும். தங்க கவசத்தை நாங்களே வங்கியில் இருந்து பெற்று தேவர் சிலைக்கு அணிவிப்போம் என்று தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் கூறினார்.
கமுதி,
அ.தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினரும் வேண்டும். தங்க கவசத்தை நாங்களே வங்கியில் இருந்து பெற்று தேவர் சிலைக்கு அணிவிப்போம் என்று தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் கூறினார்.
ேதவர் குருபூஜை விழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் வருகிற 28, 29, 30-ந்தேதி ஆகிய 3 நாட்கள் குருபூஜை விழா நடைபெற உள்ளது. தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழா 28-ந் தேதி காலை 6 மணி அளவில் விசேஷ பூஜையுடன் தொடங்குகிறது.
இதைதொடர்ந்து முதல் நாள் ஆன்மிக விழாவும் 29-ந் தேதி அரசியல் விழாவும், 30-ந்தேதி குரு பூஜை விழாவும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு தேவரின் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் கும்பாபிஷேக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 28-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் தேவர் நினைவாலயத்தில் உள்ள தேவர் சிலைக்கு தங்க கவசத்தை மதுரையில் உள்ள வங்கியில் இருந்து பெறுவது தொடர்பாக அ.தி..மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இரு தரப்பும் தங்களிடம் தான் தங்க கவசத்தை வழங்க வேண்டும் என வங்கி அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுதொடர்பாக எந்த முடிவும் வங்கி நிர்வாகம் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் பசும்பொன்னில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா அணிவித்தார்
கடந்த 2014-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா 13 கிலோ தங்க கவசத்தை அணிவித்தார். அப்போது முதல் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டும், நினைவாலய பொறுப்பாளராகிய நான் கையெழுத்திட்டும் வங்கியில் இருந்து தங்க கவசத்தை பெற்று குருபூஜையில் தேவர் சிலைக்கு அணிவித்து வருகிேறாம். அதன்படி தங்க கவசத்தை 25-ந் தேதி வங்கியில் பெற்றுக் கொண்டு நவம்பர் 1-ந் தேதி திரும்ப வங்கியில் ஒப்படைப்பது என்று ஒப்பந்தமாகி உள்ளது. அதன்படி 7 நாட்கள் அந்த தங்க கவசம் தேவர் சிலையில் இருக்கும்.
வங்கி அதிகாரிகளை சந்திக்க முடிவு
ஆனால் தற்போது அ.தி.மு.க.வில் தங்க கவசத்தை பெற இருதரப்பினர் முயற்சி செய்கிறார்கள். நாங்கள் இருதரப்பினரில் யாரையும் விட்டு கொடுக்க முடியாது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேவர் குருபூஜை விழாவை சிறப்பாக நடத்தி தர வேண்டும். தங்க கவசத்தை பெறுவது தொடர்பாக நாங்கள் வங்கிக்கு சென்று அதிகாரிகளை சந்திக்க முடிவு செய்து உள்ளோம். தங்க கவசத்தை நாங்களே வங்கியில் இருந்து பெற்று தேவருக்கு அணிவிப்போம்.
ஏற்கனவே ஓ.பன்னீர்ெசல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றாக இருந்த போது சசிகலா, தினகரன் அணியை சேர்ந்தவர்கள் தாங்கள் தான் தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறுவோம் என்று கூறி பிரச்சினை எழுந்த போது, அப்போது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அவர்களே தங்க கவசத்தை பெற்று கொடுத்தார்கள். இப்போதும் குருபூஜை விழா நடத்த மாவட்ட நிர்வாகம் தங்க கவசம் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.